மொத்தமா மாறுது! அரசு ஊழியர்களுக்கு லீவு விஷயத்தில் 'செக்' பறந்த அதிரடி உத்தரவு..இனி "களஞ்சியம்" தான்
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் லீவ் எடுக்கும் விஷயத்தில் புதிய நடைமுறையை இனி பின்பற்ற வேண்டியிருக்கும். அதாவது, இனி விடுப்பு எடுத்தால் செயலி(App) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. லீவ் மட்டும் இன்றி மேலும் சில விண்ணப்ப கோரிக்கைகளையும் இந்த செயலி மூலமே கோர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 9 லட்சத்து 48 ஆயிரத்து 522 பேர் உள்ளனர். அரசு துறைகளில் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப பல்வேறு புதுமைகளை அரசு புகுத்தி வருகிறது. குறிப்பாக அரசின் பல்வேறு பணிகள் டிஜிட்டல் மயமாகிவருகின்றன. அதேபோல ஊழியர்களின் சர்வீஸ் பைல்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இருக்கின்றன.

களஞ்சியம் செயலி: அதேபோல, அரசு ஊழியர்கள் எடுக்கும் லீவுகள், சம்பள விவரங்கள் மற்றும் ஊழியர்களின் பணி அறிக்கைகள் உள்ளிட்டவற்றையும் டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக 'களஞ்சியம்' என்ற செயலி(APP) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், அரசு ஊழியர்கள் இனி விடுப்பு எடுக்க இந்த செயலியில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
இது தொடர்பாக அரசு ஊழியர்களுக்கு துறை ரீதியாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:- அரசு ஊழியர்கள் அனைவரும் இனி தங்களது செல்போனில் களஞ்சியம் செயலியை கட்டாயம் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அதில் தங்களின் பயோ, விடுமுறை, சம்பள விவரம், பணி அறிக்கை ஆகியவற்றை ஊழியர்கள் சரி பார்த்து கொள்ள வேண்டும்.
லீவுக்கு விண்ணப்பிக்க: இனி வரும் காலங்களில் லீவு எடுப்பவர்கள், களஞ்சியம் செயலியை பயன்படுத்தி விடுப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அட்வான்ஸ் பணம் பெறுவது சம்பந்தமாக அதாவது பண்டிகை முன்பணம், குறுகிய கால முன்பணம் போன்ற விண்ணப்பங்களும் களஞ்சியம் செயலியின் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு தொடர்பாக அதிகரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அதிகாரிகள் விளக்கம்: களஞ்சியம் செயலியில் லீவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது ஊழியர்களுக்கு வைக்கப்பட்ட செக் போன்றதுதான். ஏனெனில், செயலி மூலம் விடுப்புக்கு ஊழியர்கள் விண்ணப்பித்தால், அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது, பணியில் இல்லாத ஊழியர்கள் விவரங்கள் அந்த செயலியில் சரிபார்த்துவிடலாம். ஒருவேளை, செயலியில் விண்ணப்பிக்காத ஊழியர்கள் பணியில் இல்லாமல் இருந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூட வாய்ப்பு உள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில்: அதே போல் அரசு ஊழியர்கள் போராட்ட காலத்தில் லீவ் வேண்டும் என்று விண்ணப்பித்தால் அதனை ஆப் வழியாக அரசு நிராகரித்துவிடும்" என்றனர். தமிழக அரசின் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை சார்பாக வடிவமைக்கப்பட்டுள்ள 'களஞ்சியம்' (KALANJIYAM) என்ற செயலியை அரசு ஊழியர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் டவுன் லோடு செய்து கொள்ள முடியும்.
எப்படி லாக் இன் செய்ய வேண்டும்: டவுன்லோடு செய்த பிறகு தங்களது பணியாளர் எண் மற்றும் செல்போன் எண்ணை பதிவிட்டு லாக் இன் செய்ய வேண்டும். லாக் இன் செய்த பிறகு அந்த செயலியின் திரையில் கேட்கும் சுய விவர குறிப்புகளை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு லீவு மற்றும் முன்பணம் போன்ற விவரங்களை இந்த செயலி மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.
ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள்: லீவு விண்ணப்பம், அட்வான்ஸ் தொகை மட்டும் இன்றி, சம்பள அறிக்கை, பணியிட மாற்றம், பணி அறிக்கை, இன்கம் டேக்ஸ்க்கு பிடிக்கப்பட்ட தொகை உள்ளிட்டவை என பல்வேறு விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம். இந்த செயலி மூலமாக லீவு உள்ளிட்டவற்றை விண்ணப்பிக்கும் நடைமுறைகள் எளிதாக இருக்கும் என்பதும் அரசு ஊழியர்கள் கருத்தாக உள்ளது. ஸ்மார்ட் போன் இல்லாத அரசு ஊழியர்கள் https://www.karuvoolam.tn.gov.in/ta/web/tnta/home என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications