எங்கும் கிடைக்காத விலையில் வலிமை சிமெண்ட்; யாருக்கு இது போட்டி; இதை வாங்க யாருக்கு தகுதி?
சென்னை: மார்க்கெட்டில் எங்கும் கிடைக்காத விலையில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வலிமை சிமெண்ட், பிரபல சிமெண்ட் நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிராண்டட் சிமெண்ட் மூட்டை ஒன்றின் விலை ரூ.440 முதல் ரூ.460 வரை விற்பனை செய்யப்படும் நிலையில் வலிமை சிமெண்ட் மூட்டை ரூ.360-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது.
இதனால் இனிவரும் நாட்களில் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் கனவு இல்லங்களை அரசின் வலிமை சிமெண்ட் மூலம் கட்டிக்கொள்ளலாம்.

வலிமை சிமெண்ட்
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வலிமை சிமெண்ட் என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகம் செய்யப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். அதன்படி வலிமை சிமெண்ட்டை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார். வலிமை சிமெண்ட் வெறும் அறிவிப்போடு மட்டும் நின்றுவிடும் என எதிர்பார்த்த பிரபல சிமெண்ட் ஆலைகளின் முதலாளிகள் அது செயல்பாட்டுக்கு வந்ததை அறிந்து கலக்கம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

என்ன தகுதி
மார்க்கெட்டில் சுமார் 100 ரூபாய் விலை குறைவாக கிடைக்கும் வலிமை சிமெண்ட்டை வாங்க மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினால் தங்களது வியாபார சாம்ராஜ்யம் என்னாவது என விவாதம் செய்யத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அரியலூர் மற்றும் ஆலங்குளத்தில் உள்ள TANCEM சிமெண்ட் உற்பத்தி ஆலையில் வலிமை சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக பெறுபவர் முறைப்படி ஆன்லைனில் பதிவு செய்து 700 மூட்டைகள் வரை வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யார் வாங்கலாம்
இதேபோல் வீடு கட்டுமானப் பணிக்காக தான் சிமெண்ட் மூட்டைகள் வாங்குகிறேன் என்பதை கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றிதழ் பெற்று அதனை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் படியே மலிவு விலை சிமெண்டை வாங்க முடியும். யார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றால் கார்ப்பரேட் கட்டுமான நிறுவனங்கள் கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற விளம்பரத்தை போல் மொத்தமாக வலிமை சிமெண்ட் மூட்டைகளை வாங்கி பதுக்கி வைத்துக்கொள்ளும்.

கார்ப்பரேட் முதலாளிகள்
வலிமை சிமெண்ட் மூட்டைகளில் அதிக உறுதி; நீடித்த பலம்; என்ற முழக்கம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட சில சிமெண்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து மனம் போன போக்கில் சிமெண்ட் மூட்டைகளின் விலையை உயர்த்தி வந்த நிலையில் அதற்கு கடிவாளம் போட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனால் இனி எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சில கார்ப்பரேட் முதலாளிகளின் கோபத்தையும் ஸ்டாலின் சந்திக்க வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது.

இந்தியா சிமெண்ட்ஸ்
இதனிடையே தலைமைச் செயலகத்தில் வலிமை சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன அதிபர் ஸ்ரீனிவாசன் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பு ஐ.பி.எல். வெற்றிவிழாவுக்கான அழைப்பிதழை முதல்வரிடம் கொடுக்கவே நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications