ஆதி திராவிடர் திட்ட நிதியை மகளிர் உரிமைத் தொகைக்கு பயன்படுத்துகிறோமா? யார் சொன்னது? அரசு விளக்கம்!
சென்னை: ஆதி திராவிடர் துணைத் திட்டத்தின் நிதியை கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு பயன்படுத்தபடுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
அண்ணாமலை அண்மையில் இது தொடர்பாக ஒரு புகாரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த விளக்கத்தை அரசு கொடுத்துள்ளது. அது தொடர்பான விவரம் வருமாறு;
''கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த ஆதிதிராவிடர் துணைத் திட்டங்களின் நிதியை பயன்படுத்தியுள்ளதாக தேசிய பட்டியல் இனத்தினருக்கான ஆணையத்தில் ஒரு தனிநபர் புகார் அளித்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் சில செய்திகள் வெளிவந்துள்ளன.

ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு முறையைப் பற்றிய தவறான புரிதலின் காரணமாக தான் இந்த புகாரும், அதனை பற்றிய செய்திகளும் எழுந்துள்ளன.
பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்வதே, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நோக்கமாகும்.
இதுபோன்றே, தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் மற்றும் இலவச சீருடை போன்ற மாநில அரசின் திட்டங்களுக்கும் இதே முறையில் தான் பட்டியலினத்தவருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதே போல் தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-24 வரவு செலவு திட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 7000 கோடி ரூபாயில், பட்டியல் இனத்தவர்க்கென 1,540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு செயல்படுத்தும் இந்த மகத்தான புதிய திட்டத்தில் பட்டியலினத்தவர் விடுபடாமல், திட்டத்தின் பயன்கள் அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய, திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில், பட்டியலினத்தவருக்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒதுக்கப்பட்ட 1,540 கோடி ரூபாயை பட்டியலினத்தவருக்கு மட்டும் தான் செலவிட இயலும். இது மட்டுமன்றி, கடந்த 2020-21 ஆம் ஆண்டு 13,680 கோடி ரூபாயாக இருந்த பட்டியலின மக்களுக்கு பயனளிக்கக் கூடிய ஆதி திராவிடர் துணைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு, 2023-24 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 17,076 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடித்தளமாக கொண்டுள்ள இந்த அரசு, பட்டியலினத்தவரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ளது.
மேலும், இவ்வாண்டு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நிதியை சிறப்பாக செயல்படுத்திட ஒரு சிறப்பு சட்டம் இயற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கென பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பட்டியல் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, இச்சட்டம் மிக விரைவில் நிறைவேற்றப்படும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் செலவினத்தை சிறப்பாக கண்காணிக்க நிதி துறையில் ஒரு சிறப்பு பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆதி திராவிடர் துணைத் திட்டத்தின் நிதியை பிற திட்டங்களுக்காக பயன்படுத்தபடுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது. பட்டியலினத்தவரின் நலன் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் இந்த அரசு உறுதியாக உள்ளது.''


Click it and Unblock the Notifications
