ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு.. இனி சும்மா விடப்போவதில்லை.. மத்திய அரசுக்கு நீதிபதிகள் வார்னிங்!
சென்னை: ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யானைகள் கொடூரமாக வேட்டையாடப்படுவதால், தேசிய வன விலங்கு குற்றத்தடுப்புப் பிரிவுடன், சி.பி.ஐ இணைந்து யானை வேட்டை தொடர்பான வழக்குகளை விசாரிக்க உத்தரவிடக்கோரி கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல், திருச்சியைச் சேர்ந்த நித்திய சவுமியா ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகத்தில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 ஆயிரம் விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அந்த வேளையில் குறுக்கிட்ட நீதிபதிகள், 'அசாம், பீகார், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில்தான் யானைகள் அதிக அளவில் ரயிலில் அடிபட்டு யானைகள் இறக்கும் செய்திகள் சமீபத்தில் வருகின்றன. இந்தியாவில் 29 ஆயிரம் யானைகள் இருந்த நிலையில், தற்போது அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது' என்று அதிர்ச்சி தெரிவித்தனர்.
அப்போது மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன், 'கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 61 யானைகளும் ரயிலில் அடிபட்டு இறந்து உள்ளது' என்று மத்திய தணிக்கை துறை அறிக்கை தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இதையடுத்து கூறிய நீதிபதிகள் யானைகள் இறப்பு தொடர்பாக குழுக்கள் அமைத்து பரிந்துரைகள் மட்டும் பெறப்படுவதாகவும், அந்த பரிந்துரைகள் காகித அளவில் மட்டும் உள்ளதாகவும், யானைகள் இறப்பு குறித்து யாரும் கவலைப்படுவதில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.
ரயில் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், 'யானைகள் வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் வேகத்தில்தான் ரயில் இயக்கப்படுகிறது. 5 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கினாலும் யானை மீது மோதினால் அவை இறக்கத்தான் செய்யும். இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- ரயில்வே சொத்துக்களை பாதுகாக்க தடுப்பு சுவர்களை எழுப்புவதால், யானைகள் வேறு வழியில்லாமல் தண்டவாளங்களை கடக்கும் சூழல் ஏற்படுகிறது. யானை இழப்பைத் தடுக்க எவ்வளவு பணம் செலவழித்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசும், தெற்கு ரயில்வேயும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications