Tamil nadu budget: உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ 5000! பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு பெருமிதம்
சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் உலமாக்களின் மாதாந்திர உதவித் தொகை ரூ 3000 திலிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டதை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2026- 2027 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீடுகளை இன்று சட்டசபையில் முன் வைத்து அவர் பேசினார்.

அவர் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளில் 90,733 சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளனர். தொன்மையான பள்ளி வாசல்கள், மற்றும் தர்காக்கள் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பழமையான தேவாலயங்கள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் புனரமைக்கப்பட்டுள்ளன.
இந்த இடைக்கால வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக 16 கோடி ரூபாயும், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் புனரமைப்பிற்காக ரூ 20 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலம் 2,597 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் உலமாக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ 3000-லிருந்து ரூ 5000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் உலமாக்களின் ஓய்வூதியத்திற்காக 2.70 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக 39 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் ஹஜ் இல்லம் கட்டும் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு 1634 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications