அரசியல் அமைப்பு சொல்வதைதான் செய்கிறோம் - எடப்பாடி பழனிச்சாமிக்கு மாநில தேர்தல் ஆணையர் பதில்!
சென்னை: மாநில தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு சட்டத்தின் படியே செயல்படுகிறது என எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டுக்கு தமிழக தேர்தல் ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், கோயமுத்தூர் மாநகராட்சியில், கலவரம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், ''கோவை மாநகராட்சி தேர்தலில் வன்முறையை ஏற்படுத்தி, மக்களை அச்சுறுத்தி ஜனநாயக முறைப்படி வாக்களிக்காமல் தடுப்பதற்காக திமுக தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின், அமைச்சர் திரு.செந்தில் பாலாஜியை நியமித்து அவர் இந்த பணியில் ஈடுபட்டிருக்கின்றார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது
குண்டர்களையும்,ரவுடிகளையும் வெளியேற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர், சட்டமன்ற அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை ஆணையர் இடத்திலும் புகார் அளித்தார்கள் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாகவும், மாவட்ட காவல்துறை ஏவல் துறையாகவும் செயல்படுவதை கண்டிப்பதுடன்,
தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்'' என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதற்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், ''மாநில தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு சட்டத்தின் படியே செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தை வேறு யாரும் கட்டுப்படுத்த முடியாது'' என
எடப்பாடி பழனிச்சாமி புகாருக்கு தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் விளக்கமளித்துள்ளார்.
பழனிகுமார் மேலும் கூறுகையில், ''நாளைய தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1.13 லட்சம் தமிழ்நாடு போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 1.32 லட்சம் அலுவலர்கள் பணிபுரியவுள்ளனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் 2.83 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். கோவைக்கு தேவையான அளவு காவல்துறையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்'' என பழனிகுமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications