"சாப்ட் கார்னர்".. திமுகவை எதிர்க்க முடியாமல் திணறும் அதிமுக?.. தோல்விக்கு பின்னுள்ள முக்கிய காரணம்!
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. ஒரு எதிர்க்கட்சியாக குறைந்தபட்ச இடங்களை கூட வெல்லாமல் 9 மாவட்டங்களில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.
காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் ஆளும் திமுக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய இரண்டு முக்கியமான பதவிகளையும் திமுக, திமுக கூட்டணி கட்சிகள்தான் கைப்பற்றி உள்ளன.
140 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு நடந்த தேர்தலில் 138 இடங்களில் திமுக வென்றுள்ளது. 2 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1,007 இடங்களை திமுக அதன் கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளன. அதிமுக 214 ஒன்றிய இடங்களை வென்றுள்ளது. பா.ம.க. 45 இடங்களை பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் படுதோல்வி அடைந்துள்ளன.

அதிமுக படுதோல்வி
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. மிகப்பெரிய தோல்வி என்றால் வெறும் 2 மாவட்ட கவுன்சிலர் இடங்களை மட்டுமே வெல்லும் அளவிற்கான தோல்வி. இதைத்தான் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினும் விமர்சனம் செய்து இருந்தார். எதிர்க்கட்சி இல்லை என்ற இறுமாப்பில் பேசவில்லை. ஆனால் அதிமுக ஒரு எதிர்க்கட்சி பெற வேண்டிய குறைந்தபட்ச இடங்களை கூட பெறவில்லை, என்று விமர்சனம் செய்து இருந்தார். ஆம் அதிமுக எதிர்கட்சிகளுக்கான அந்த குறைந்தபட்ச "டஃப் பைட்டை" கூட கொடுக்காமல் தோல்வி அடைந்துள்ளது.

அதிமுகவின் அஸ்திவாரம் என்ன?
அதிமுகவின் இந்த தோல்விக்கு திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் அந்த கட்சி சறுக்கியதுதான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதிமுக என்ற இயக்கம் தொடங்கப்பட்டதே திமுகவுடனான மோதல்தான். எம்ஜிஆர் இந்த இயக்கத்தை தொடங்கியதே திமுகவையும், அதன் தலைவர்களையும் எதிர்க்கும் விதத்தில்தான். அதிமுக அதில் பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. திமுகவின் எதிர்ப்பை, திமுகவிற்கு எதிரான மாற்று வாக்குகளை மொத்தமாக அதிமுக தங்கள் பக்கம் இழுத்தது.

திமுக எதிர்ப்பு - இருபெரும் தலைவர்கள்
அதிமுகவின் இரும்பெரும் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இரண்டு பேருமே திமுகவின் எதிர்ப்பை பிரதானமாக வைத்து இருந்தனர். முன்பு இரண்டு தலைவர்களுமே திமுகவில் இருந்தவர்கள்தான் என்றாலும் அதிமுக பிரிவினைக்கு பின் எப்போதும், எங்கேயும் திமுகவோடு இணக்கமாக எம்ஜிஆர், ஜெயலலிதா செயல்படவில்லை. அதிலும் ஜெயலலிதா காலத்தில் திமுக - அதிமுக மோதல் என்பது அரசியல் தாண்டி மற்ற மேடைகளிலும் கூட எதிரொலித்தது.

எங்கேயும் திமுகவோடு இணக்கம் இல்லை
ஜெயலலிதா மீதான திமுகவின் வழக்குகள், கருணாநிதி கைது, சட்டசபையில் முகத்தை கூட பார்த்துக்கொள்ள விருப்பம் இல்லாமல் அவையை புறக்கணிப்பது, ஒரே மேடையில் தோன்றாமல் புறக்கணிப்பது, திட்டங்களில் தலைவர்களின் பெயர்களை நீக்குவது என்று அதிமுக - திமுக இடையிலான மோதல் கடுமையாக இருந்தது. திமுகவோடு கொஞ்சம் நெருக்கமாக இருந்தாலே போதும் அவர்களுக்கு கட்சியில் இடம் கிடையாது என்ற அளவிற்கு ஜெயலலிதா திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்தார்.

ஆனால் தற்போதைய அதிமுக
திமுக தலைவர்களை எதிர்த்து கண்டிப்பாக பேசிய சில எம்எல்ஏக்களுக்கு ஜெயலலிதா உடனே அமைச்சர் பதவி வழங்கி பரிசளித்த சம்பவங்களும் கூட நடந்து இருக்கின்றன. திமுகவின் ஒரே மாற்று அதிமுகதான் என்ற உயரத்தை இது அக்கட்சிக்கு கொடுத்தது. திமுகவிற்கு எதிராக சரியான ஆள் இவங்கதான் என்று சொல்லும் அளவிற்கு அதிமுகவின் செயல்பாடுகள் இருந்தன. ஆனால் இப்போது இருக்கும் அதிமுக தலைவர்களில் செயல்பாட்டில் அந்த திமுக எதிர்ப்பு அஸ்திரம்தான் மிஸ்ஸாகிறது. ஜெயலலிதா, எம்ஜிஆர் எதிர்த்தது போல திமுகவை எதிர்க்க முடியாமல் அதிமுக திணறிக்கொண்டு இருக்கிறது.

சட்டசபை தேர்தலுக்கு பின்
சட்டசபை தேர்தலுக்கு முன்பு கூட திமுக மீது ஆளும் கட்சி என்ற முறையில் அதிமுக விமர்சனங்களை வைத்தது. ஆனால் சட்டசபை தேர்தலுக்கு பின் கிட்டத்தட்ட அதிமுக தலைவர்கள் பலரும் அப்படியே அடங்கிவிட்டனர். பல இடங்களில், ஏன் சட்டசபையிலேயே கூட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் திமுக தலைவர்களை பாராட்டி பேசினார். அதிமுகவின் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி போன்ற முக்கிய தலைவர்களும் ஆங்காங்கே திமுகவின் சில அறிவிப்புகளை பாராட்டி பேசினார்கள்.

பெரிதாக எதிர்க்கவில்லை
வழக்குகள் ரெய்டுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிமுக தரப்பு பெரிதாக எங்குமே திமுக எதிர்ப்பை காட்டவில்லை. தொடக்கத்தில் திமுகவை தனி ஆளாக எதிர்த்து பேசிக்கொண்டு இருந்த எடப்பாடி பழனிசாமியும் கோடநாடு விவாகரத்திற்கு பின் கொஞ்சம் சைலன்ட் ஆனார். 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் பெரிதாக திமுக எதிர்ப்பை காட்டவில்லை. நாம் தமிழர் கட்சிக்கு மேடைக்கு மேடை திமுகவை எதிர்த்த அளவிற்கு கூட, பாஜக முன்னெடுத்த போராட்டங்கள் அளவிற்கு கூட பிரதான எதிர்க்கட்சியான அதிமுக செயல்படவில்லை.

அமைதியோ அமைதி
அந்த அளவிற்கு திமுகவுடன் அதிமுக சாப்ட் உறவை கடைப்பிடித்து வருகிறது. அதிலும் அதிமுகவிற்கு ஸ்கோர் செய்ய நிறைய இடங்களும் கிடைத்தன. எம்பி ரமேஷ் மீதான வழக்கு, எம்பி ஞானதிரவியம் மீதான வழக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் என்று அதிமுக வலிமையான எதிர்ப்பு காட்ட, பெரிதாக்க வேண்டிய பிரச்சனைகள் இருந்தன. ஆனால் இது போன்ற சந்தர்ப்பங்களை எல்லாம் அதிமுக தலைவர்கள் பெரிதாக பயன்படுத்தாமல் "அமைதியோ அமைதி" என்று இருந்ததும் கூட அந்த கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளது.

தொண்டர்கள் சுணக்கம்
திமுகவை அதிமுக முன்பை போல வலுவாக எதிர்க்காதது அதிமுகவிற்கான ஆதரவை குறைத்துள்ளது. அதிமுகவின் அந்த வலுவான பிம்பம் கொஞ்சம் சறுக்கி உள்ளதால் தொண்டர்களே சுணக்கம் அடைந்துள்ளனர். தலைவர்களே திமுகவை எதிர்க்கவில்லை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்று தொண்டர்கள் சுணக்கம் அடைந்ததே 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலித்துள்ளது. இந்த இடத்தில்தான் சசிகலா அதிமுகவிற்கு உரிய பாடம் எடுத்து வருகிறார். அதிமுகவை மீட்பேன் என்று கூறும் சசிகலா.. அடுத்த வரியிலேயே நாம் ஒன்றாக இருக்க வேண்டும், அப்போதுதான் திமுகவை எதிர்க்கலாம் என்கிறார்கள்.

சசிகலா பிடித்தார்
அதிமுகவிற்கு எதிரி திமுகதான், நமக்கு நாம் எதிரியாக இருக்க கூடாது என்று போகிற இடங்களில் எல்லாம் சொல்கிறார். சசிகலாவிடம் இருக்கும் இந்த அடிப்படை திமுக எதிர்ப்புதான் தற்போதைய அதிமுக தலைவர்களிடம் மிஸ்ஸிங். இதுதான் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்க முடியாமல் தலைமை திணற காரணம். இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவிற்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை அதிமுகதான் வாங்கி இருக்கிறது.

மீண்டும் எதிர்ப்பு
மீண்டும் திமுக எதிர்ப்பை வலுவாக கடைபிடித்தால்.. வழக்குகளுக்கு அஞ்சாமல் வலுவாக விமர்சனங்களை வைத்தால் அதிமுக மீண்டும் பார்மிற்கு திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. மாறாக இதே சுணக்கத்தை அதிமுக காட்டும்பட்சத்தில் அதிமுகவின் இடத்தை வேறு எதாவது ஒரு கட்சி பிடித்துவிடும் வாய்ப்புகளும் உள்ளன. வலுவான தலைவர்கள்.. தேர்தல் வெற்றி என்பதை எல்லாம் தாண்டி அதிமுகவிற்கு இப்போது மிக முக்கிய தேவை சுயபரிசோதனை மட்டும்தான்!












Click it and Unblock the Notifications