”யார் நீ? பொறுக்கிகள்.. வாலை ஒட்ட அறுத்து சுண்ணாம்பு போடுவோம்” -அண்ணாமலையை ஒருமையில் பேசிய அமைச்சர்
சென்னை: கருணாநிதி பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒருமையில் கடுமையாக சாடிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்லாவரத்தில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேர்தல் வாக்குறுதி
அப்போது உரையாற்றிய அவர், கருணாநிதியின் பணிகள், திட்டங்கள், அரசியல் செயல்பாடுகளை சிலாகித்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர், "கருணாநிதியின் மறு உருவாக இருக்கும் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்று இன்று ஓராண்டு கடந்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக திமுக வெற்றிபெற்றால் இந்தெந்த திட்டங்களை நிறைவேற்றுவோம் என உறுதியளித்தார். 505 தேர்தல் வாக்குறுதிகளை புத்தகம்போட்டு கொடுத்தார். அதில் 65- 70 சதவீதம் வரை நிறைவேற்றி இருக்கிறார்.

ரூ.15 லட்சம் என்னாச்சு?
இவ்வளவு வேலையை நாம் பார்த்திருக்கிறோம், நேற்று முந்தினம் முளைத்து வந்தவர்கள் எல்லாம் 300 பேருடன் சென்று கோட்டையை முற்றுகையிடுகிறார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சொல்கிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால் உங்கள் டாடியிடம்போய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சொல்லுங்கள். 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.15 லட்சம் பணம் வங்கிக்கணக்கில் போடுவதாக சொன்னார்.

16 கோடி வேலைவாய்ப்பு என்னாச்சு?
நாம் மறந்துவிடுவதால்தான் இவர்கள் எல்லாம் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு ஆண்டுக்கு வேலை தருவதாக சொன்னார். அதுபோல் ஒருவருக்கு வேலை கொடுத்தாரா? 8 ஆண்டு ஆட்சியில் 16 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். இங்கிருக்கும் கல்பாக்கம் அனல் மின் நிலையத்தில் ஒரு தமிழனுக்கு கூட வேலையில்லை. எல்லாம் இந்திக்காரர்களுக்குதான் கொடுத்திருக்கிறார்கள். அதை முதலில் சரி செய்யுங்கள்.

பெட்ரோல் விலை
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி செய்கிறது. உங்கள் டாடியிடம் சொல்லி மேகதாது அணை கட்டும் பணியை நிறுத்துங்கள். பின்னர் வந்து பேசுங்கள். வங்கிக் கணக்கு தொடங்கினால் சிலிண்டர் மானியம் ரூ.200 தருவதாக சொன்னார்கள். வரவில்லை. இதை தடுத்துவிட்டு இங்கு வந்து பாஜக அரசியல் செய்ய வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் விலை ரூ.66.09. தற்போது ரூ.102.63 ஆக உள்ளது. ரூ.36 அதிகரித்து உள்ளது. இதனால்தான் விலைவாசி உயர்ந்துள்ளது.

பொறுக்கிகள்
இவர்கள் சொல்கிறார்கள் நாம் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை. இன்னும் ரூ.1,000 மட்டும்தான் நாங்கள் கொடுக்கவில்லை. வேறு ஏதாவது சொல்ல முடியுமா? கண்ட பொறுக்கிகள் எல்லாம் நமது ஆட்சியை பற்றி பேசுகிறார்கள். அண்ணாமலை ஐ.பி.எஸ் ஆக இருந்து ரவுடிகளை பிடித்து சிறையில் அடைக்காமல் பாஜகவில் சேர்த்துள்ளார். அதிமுகவினர் அதிகம் கொள்ளையடித்துள்ளதால் வழக்கிற்கு பயந்து வேகமாக செயல்படாமல் உள்ளனர்.

எதிர்க்கட்சியாக முயற்சி
இதை சந்தர்ப்பமாக பார்த்து பாஜக எதிர்க்கட்சியாக நினைக்கிறது. எந்த மாநிலத்தில் வேண்டுமாலும் இது நடக்கும். தமிழ்நாட்டில் உங்கள் கதை வேகாது. உங்களுக்கு கோயிலில் கூட இடம் கிடைக்காது. பிள்ளையார் கோயில் கட்டுவது, கூல் ஊற்றுவது, கும்பாபிஷேகம் நடத்துவது எல்லாம் எங்கள் ஆட்கள்தான். நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது இவர்களை நாம் உள்ளேயே விடவில்லை. இது பெரியார் மண்.

ஆட்டோவில் சென்ற அண்ணாமலை
அதிமுகவினரின் ஊழல் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளீர்களா? அன்று முற்றுகை போராட்டத்தின்போது போலீசார் இவரை தேடினால் ஆட்டோவில் ஏறி ஓடிவிட்டார். ஒருவாரம் சிறையில் அடைத்தால் கட்சி வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள். நாங்கள் எல்லாம் சிறை என்றால் பெட்டியை தூக்கிக் கொண்டு போய்விடுவோம். இவர்கள் பெயரைக்கூட என் தகுதிக்கு சொல்வதில்லை. ரொம்ப ஆட்டம்போட்டால் வாலை ஒட்ட அறுத்து சுண்ணாம்பு போட்டுவிடுவோம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார்
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறார்களாம். நாங்கள் எப்போதோ தயாராகிவிட்டோம். அதிமுகவுடனோ வேறு யாருடனே சேர்ந்து வந்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம். பிரதமர் கூட்டத்தில் முதலமைச்சர் பேசி இருக்கக்கூடாது என்கிறார். 2 மாதம் முன் மரியாதையாக டெல்லி சென்று முதலமைச்சர் பார்த்தார். கச்சத்தீவை இந்திரா காந்தி கொடுத்தபோது கண்டன கூட்டம் நடத்தியவர் கருணாநிதி. வரலாறு தெரியாமல் பேசுகிறார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications