இனிப்பு செய்தி.. தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தந்த உறுதி.. பரபரப்பு பேட்டி
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அமைச்சர் உறுதி தந்துள்ளார்
சென்னை: தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி தந்துள்ளார்.. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ல் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 8 பாடங்களை பகுதிநேரமாக மாணவர்களுக்கு கற்று தந்து வருகிறார்கள்.. மாதம் 5 ஆயிரம் ரூபாய் இவர்களுக்கு சம்பளம் தரப்பட்டு வந்தது..
இது படிப்படியாக உயர்த்தப்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் மாத சம்பளம் 10 ஆயிரம் வரை உயர்ந்து வந்துவிட்டது.. ஆனாலும், பகுதிநேர ஆசிரியர்களில் 4 ஆயிரம் பேர் வெளியேறிய நிலையில், இப்போதைக்கு 12 ஆயிரம் பேர் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர்.

சலுகைகள்
தங்களுக்கு 10 ஆயிரம் போதுமானதாக இல்லை என்றும், எந்தவிதமான சலுகைகளையும் பெற முடிவதில்லை என்றும், தங்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் இவர்களும் நீண்ட காலமாகவே கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்... ஆனாலும் இந்த வேண்டுகோள் நிலுவையிலேயே உள்ள நிலையில், பல பேர் ரிடையர் ஆகி விட்டனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், பகுதிநேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்வோம் என்று திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது..

வரவேற்பு
இந்த அறிவிப்பை தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வரவேற்றிருந்தார்.. அதுகுறித்த ஒரு செய்திக்குறிப்பையும் வெளியிட்டிருந்தார். அதில், அதிமுக 10 வருடங்களாக ஆட்சி செய்தபோதும் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய முடியாது என்று கடைசியில் கைவிட்டுவிட்டார்கள்... இது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் பேரிடியாக, பேரதிர்ச்சியாகிவிட்டது. இந்த நிலையில் தி.மு.க தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை அனைவரும் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

பணிநிரந்தரம்
அதேபோல ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள திமுகவிடமும், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. திமுக அரசு பெறுப்பேற்ற பிறகு முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 13ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் பள்ளிக்கல்விக்கு 32,600 ரூபாய் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை... அதேபோல பள்ளிக்கல்வி மானிய கோரிக்கை நடந்த ஆகஸ்ட் 26 அன்றும் அறிவிக்கவில்லை.

நம்பிக்கை
இப்படிப்பட்ட சூழலில்தான், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. மேலும், பள்ளி மாணவர்களின் பயம் போக்கும் வகையில் அரையாண்டு, முழு ஆண்டு தேர்விற்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications