தென் மாவட்ட மக்களுக்கும் பன்னோக்கு மருத்துவமனை தேவை.. நீண்ட நாள் கோரிக்கை.. கவனிப்பாரா முதல்வர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் சென்னையில் அமைக்க உள்ளது போன்று மதுரையை மையமாக வைத்து ஒரு பன்னோக்கு அரசு மருத்துவமனையை அரசு அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான நேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று 5 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் ஒன்றுதான் தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு.

மாற்றுக் கருத்து இல்லை

மாற்றுக் கருத்து இல்லை

சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அமைய உள்ள பன்னோக்கு மருத்துவமனை அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்றுதான். வேலைவாய்ப்பு, உயர் படிப்புகளுக்காக சென்னையில் பல லட்சக்கணக்கானோர் குவிந்துள்ள நிலையில் தலைநகரில் உயர்தர மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சென்னையில் இருக்கும் வசதிகள்

சென்னையில் இருக்கும் வசதிகள்

ஆனால் மற்ற மாவட்ட மக்களை குறிப்பாக தென் மாவட்டங்களை மையமாக வைத்து ஒரு பன்னோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனென்றால் சென்னையை பொறுத்தவரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, அண்ணாசாலை பன்னோக்கு உயர் மருத்துவமனை என்று உயர்தர சிகிச்சைகள் நிறைந்த பெரிய, பெரிய அரசு மருத்துவமனைகள் உள்ளன.

பல்வேறு மருத்துவமனைகள்

பல்வேறு மருத்துவமனைகள்

இவையெல்லாம் பொது மருத்துவமனைகள்தான். இது தவிர பல் சிகிச்சைக்காக பிராட்வே அரசு மருத்துவமனை, கண் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனை, குழந்தைகள் நலன், பேறுகால சிகிச்சைக்காக எழும்பூர், திருவல்லிக்கேணியில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவை தவிர்த்து வெளிநாட்டினரும் வந்து சிகிச்சை பெற்று செல்லும் அதிநவீன சிகிச்சை வசதிகள் நிறைந்த தனியார் மருத்துவமனைகளும் கொட்டிக் கிடக்கின்றன.

மதுரையில் இருப்பது ஒன்றுதான்

மதுரையில் இருப்பது ஒன்றுதான்

இதே தரவுகளை வைத்துக் கொண்டு நாம் தென் மாவட்டங்களை நோக்கி சென்றோம் என்றால் சொல்வதற்கு ஏதும் இல்லை. குறிப்பாக கோவில் நகரமான மதுரையை எடுத்துக் கொண்டோம் என்றால் அங்கு இருக்கும் கோவில்களை விட அரசு மருத்துவமனைகள் மிகமிகக் குறைவே. அதிலும் கோரிப்பாளையத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை தான் மதுரையில் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு பெரிய மருத்துவமனை. சென்னையை போன்று சில தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும் அங்கு வசூலிக்கப்படும் அதிக கட்டணம் காரணமாக அந்த மருத்துவமனை கட்டிடங்களின் நிழலில் கூட ஏழை மக்களால் ஒதுங்க முடியாது.

மக்கள் நம்பி இருப்பது இதைத்தான்

மக்கள் நம்பி இருப்பது இதைத்தான்

எனவே சுற்று வட்டார மாவட்ட மக்கள், கிராம மக்கள் அதிகம் நம்பி இருப்பது ராஜாஜி மருத்துவமனையை தான். தேனி, திண்டுக்கல், சாத்தூர், ராஜபாளையம் வரையிலான பகுதி மக்கள், சிவகங்கை, ராமநாதபுரம் வரையிலான பகுதி மக்கள் அவசர சிகிச்சைக்காக, வேறு சிகிச்சைக்காக ராஜாஜி மருத்துவமனையைதான் சார்ந்து இருக்கின்றனர். மொத்தம் 2,518 படுக்கைகள் அளவு கொண்ட இந்த மருத்துவமனையில் அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிப்பது கடினமான காரியம்.

திருநெல்வேலி நிலை எப்படி?

திருநெல்வேலி நிலை எப்படி?

தென் மாவட்டத்தில் முக்கிய நகரமான திருநெல்வேலியை பொறுத்தவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை ஒன்றே பிரதானமாக உள்ளது. தென்காசி, சங்கரன் கோவில் வரையிலான மக்கள், கோவில்பட்டி, தூத்துக்குடி வரையிலான மக்களின் அவரச சிகிச்சைக்கு கைகொடுப்பது இந்த மருத்துவமனை ஒன்றுதான். தற்போது கொரோனா காலத்தில் அனைவருக்கும் படுக்கைகள் அளிக்க முடியாமல் இந்த மருத்துவமனை அல்லாடியது. ஆக இங்கேயும் குறிப்பிடும்படியாக வேறு அரசு மருத்துவமனைகள் கிடையாது.

சென்னைக்குதான் வர வேண்டியதுள்ளது

சென்னைக்குதான் வர வேண்டியதுள்ளது

இதேபோல் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஆறுதலாக இருப்பது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மட்டும்தான். சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு கைகொடுத்து வருவது இந்த ஒரு மருத்துவமனைதான். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்கள் அறுவை சிகிச்சை போன்ற உயர் சிகிச்சைகளுக்கு ஒன்று சென்னை செல்ல வேண்டியதுள்ளது. அல்லது கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்ல வேண்டியதிருக்கிறது.

கூடுதல் செலவுகள்

கூடுதல் செலவுகள்

இதேபோல் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு தான் வர வேண்டியதுள்ளது. ஒவ்வொரு முறையும் சென்னைக்கு சென்று வர வேண்டும் என்பதால் இவர்களுக்கு கூடுதல் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படுகிறது. குறிப்பாக களியக்காவிளை, மார்த்தாண்டம் பகுதியில் இருப்பவர்கள் சென்னை செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 4 நாட்களையாவது ஒதுக்கி வைக்க வேண்டியதுள்ளது.

மதுரையை மையமாக வைத்து

மதுரையை மையமாக வைத்து

எனவே தென் சென்னையில் அமைக்க உள்ளது போன்று மதுரையை மையமாக வைத்து ஒரு பன்னோக்கு அரசு மருத்துவமனையை அரசு அமைக்க வேண்டும். சென்னையில் உள்ளதை போன்று இதில் வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தால் மேற்கண்ட மாவட்டங்களின் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கால விரயம், கூடுதல் செலவுகள் தவிர்க்கப்படும். இது போக இந்த மாவட்டங்களில் இருக்கும் சிறு, சிறு மருத்துவமனைகள் கூடுதல் சுமையில் இருந்து விடுபடும்.

முதல்வர் கவனிப்பாரா?

முதல்வர் கவனிப்பாரா?

இது இப்போது எழுந்துள்ள கோரிக்கையல்ல. தென் மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் கோரிக்கையாகும். ஏற்கனவே சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் அதி நவீன நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில், தென் மாவட்டங்களின் மக்கள் பயனுறும் வகையில் மதுரையில் பன்னோக்கு உயர்தர சிகிச்சை அரசு மருத்துவமனையை முதல்வர் அமைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களின் குரலை முதல்வர் கவனிப்பாரா? ''இதெல்லாம் சரிதான்பா.. அதான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உள்ளார்களே. பிறகென்ன '' என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம். அறிவித்து பல ஆண்டுகளாகியும் இன்னும் கட்டுமான பணியே தொடங்கப்படாத நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? என்ற யோசனையை, முடிவை கேள்வி எழுப்பும் உங்களிடமே விட்டு விடுகிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+