12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி
ஆல் பாஸ் போடப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி என்ற குழப்பம் நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலால் பள்ளி மாணவர்கள் பல மாதங்களாக பள்ளிக்கு சென்று படிப்பை தொடர முடியாத நிலை நீடிக்கிறது. நடப்பு கல்வியாண்டில் எப்போது பள்ளிகள் திறக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆல்பாஸ் போடப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண்கள் வழங்குவது, பிளஸ் 2 பொதுத்தேர்வினை நடத்துவது எப்போது என்று புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் அதிகாரிகளும் ஆலோசித்து அறிவிக்க உள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவ தொடங்கியதால் பிளஸ் 2 தவிர அனைத்து பள்ளி மாணவர்களும் 2019-20ஆம் கல்வியாண்டில் ஆல் பாஸ் ஆனார்கள். 2020-21ஆம் கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்ட போதிலும் இதனால் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் முழுமையான பலன் பெறவில்லை.
தனியார் பள்ளிகள் மட்டுமே முறைப்படி ஆன்லைன் வகுப்புகளை நடத்தின. அரசு பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. 1 முதல் பிளஸ் 1 வரை அனைவருக்கும் ஆல்பாஸ் போடப்பட்டுள்ளது.

மதிப்பெண் எப்படி கொடுப்பது
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்குவது எப்படி என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட போது காலாண்டு, அரையாண்டு பொதுத் தேர்வுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. ஆனால் இம்முறை காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத நிலையில் எப்படி மதிப்பெண்களை வழங்குவது என்பதில் குழப்பம் நிலவுகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது
12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மே மாதம் நடைபெறுவதாக இருந்து பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. செய்முறைத் தேர்வுகள் மட்டுமே நடைபெற்ற நிலையில் எழுத்துத் தேர்வு எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா, எப்போது நடைபெறும் என தெரியாமல் மாணவர்கள் தொடர்ந்து மன அழுத்தத்தில் உள்ளனர். மேலும் தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளதால் பள்ளிக் கல்வித்துறை சார்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்பது குறித்தும் விவாதங்கள் எழுந்து வருகின்றன.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை
புதிதாக பொறுப்பேற்றுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மே 10ஆம் தேதி ஆலோசனை நடைபெறுகிறது. இதில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் 12ஆம் வகுப்புத் தேர்வை எப்போது நடத்துவது, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குவது என்பது குறித்து தெரியவரும்.

அரசு பள்ளிகளில் சேர்க்கை
இதனிடையே அரசு பள்ளிகள் 2021- 2022-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க பள்ளி கல்வித்துறை சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் 12ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கவும் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி புத்தக பாடங்கள்
மாணவர்களின் கற்றல் குறைபாட்டை சரிசெய்யும் வகையில் 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற பெயரில் கையேடு மற்றும் பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து 2ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பிரிட்ஜ் கோர்ஸ் பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் மே 11ஆம் தேதி முதல் பயிற்சி புத்தக பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.

காணொலி வடிவில் பாடங்கள்
இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் மு.பழனிசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பிரிட்ஜ் கோர்ஸ் கையேடு தயாரிக்கப்பட்டது. இது வரும் 10ஆம் தேதி வரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும். பயிற்சி புத்தகப் பாடங்கள் காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை வரும் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. அதாவது 2ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாள்தோறும் 2 காணொலிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications