ஆளுநர் மாளிகை புகார் முற்றிலும் பொய்.. டிஜிபி பரபர விளக்கம்! பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் ஷாக்!
சென்னை: ஆளுநர் மாளிகை முன் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்று சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஆளுநர் மாளிகை புகாரில் தெரிவிக்கப்பட்டது போல அத்துமீறி ஆளுநர் மாளிகைக்குள் யாரும் நுழைய முற்படவில்லை என தமிழ்நாடு டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பட்டப் பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து குண்டு வீச முயன்றுள்ளார். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற கருக்கா வினோத்தை போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.

ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீதுதான் பெட்ரோல் குண்டு விழுந்தது. பெட்ரோல் குண்டு வீச்சில் எந்த சேதமும் இல்லை. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத், அப்போது மதுபோதையில் இருந்துள்ளார் என காவல்துறை தரப்பில் சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்தார்.
முரண்பாடான தகவல்: ஆனால், ஆளுநர் மாளிகை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்திலும், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பிற்பகல் 2.45 மணியளவில் ஆளுநர் மாளிகையை நோக்கி தாக்குதல் நடந்ததாகவும், பலத்த சத்தத்துடன் ஆளுநர் மாளிகை பிரதான நுழைவுவாயிலில் பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. ராஜ்பவன் பாதுகாப்பு காவலர்கள் பெட்ரொல் குண்டு வீசிய நபர்களை பிடித்த போதும் மற்றொரு குண்டு வீசப்பட்டது. இதில் ஆளுநர் மாளிகை பிரதான வாயிலின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டிஜிபி விளக்கம்: போலீஸ் தரப்பில், கருக்கா வினோத் வீசிய பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை, கீழே விழுந்து உடைந்தது என கூறப்பட்ட நிலையில், ஆளுநர் மாளிகை புகாரில், பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது என்றும், இதில் ஆளுநர் மாளிகையின் கேட் 1 முன்பகுதி சேதம் அடைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், ஆளுநர் மாளிகையின் புகாருக்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை முன் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்று சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.

உண்மையில் என்ன நடந்தது: இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42 வயது -E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் வழக்கமான குற்றவாளி) என்பவர் சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை அருகே தனியாக பாதசாரி போன்று நடந்து வந்தார். அவர் பெட்ரோல் நிரம்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டுவந்து, அவற்றை ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சர்தார் படேல் சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்து எறிய முற்பட்டபோது, ஆளுநர் மாளிகை வெளிப்புறத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த தமிழ்நாடு காவல்துறை போலீசாரால் தடுக்கப்பட்டார்.
கைது செய்யப்படுவதற்கு பயந்து, சம்பவ இடத்திற்கு எதிரே சற்று தூரத்திலிருந்து இரண்டு பாட்டில்களை வீசினார். அவை ஆளுநர் மாளிகையின் அருகே சர்தார் படேல் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்களுக்கு அருகே விழுந்தது. பின்னர், அவர் ஆளுநர் மாளிகையின் பிரதான வாயிலிலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில், பாதுகாப்பு போலீசாரால் உடனடியாக கைதுசெய்யப்பட்டு. காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எந்த சேதமும் இல்லை: இச்சம்பவத்தால், பொருட்களுக்கோ அல்லது எந்த நபருக்கோ எவ்வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை. கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், மேற்படி நபர் தேனாம்பேட்டையிலிருந்து, சம்பவ இடம் வரை தனியாகவே வந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, 25.10.2023 அன்று J-3 கிண்டி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது மேற்படி எதிரி, IV-வது பெருநகர குற்றவியல் நடுவர் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு. 09.11.2023 வரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்படி வினோத் ஏற்கனவே பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள் சௌத் போக் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் 12.08.2015 அன்று பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர்.
எஃப்.ஐ.ஆர் போடலையா?: அதேபோல் 13.07.2017 அன்று வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரம்பிய பாட்டில்களை வீச முற்பட்ட போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வினோத் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆளுநர் அவர்களுக்கு எதிராக பகிரங்க மிரட்டல், அவதூறுப் பேச்சு மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை தொடர்பாக காவல்துறையினர் நியாயமான முறையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை எனவும், மேலும் அச்சம்பவங்கள் தொடர்பாக எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டு, 25.10.2023 அன்று மருத்துவர் T.செங்கோட்டையன் (ஆளுநரின் துணைச் செயலாளர்) புகார் அளித்துள்ளார்.
உண்மைக்கு புறம்பானது: 25.10.2023 அன்று நடந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சர்தார் படேல் சாலையில் செய்யப்பட்ட செயலாகும். இந்த நிகழ்வில் புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும், அவர்கள் அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளிகை வாயிற்காப்பாளர்களால் (Sentry) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.
அதேபோல் ஏப்ரல் 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்ற போது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்கு புறம்பானது. ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியை கடந்து சென்ற பின்னர் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலையில் வீசினர்.
அக்கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாக சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி சம்பவங்கள் அனைத்திற்கும் காணொளி ஆதாரங்கள் உள்ளன. மேலும், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். மேலே குறிப்பிட்டுள்ளது போன்று எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
சிசிடிவி பதிவுகள் உள்ளது: ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பிற்காக சர்தார் படேல் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள் விழிப்புடன் இருந்த காரணத்தினாலும், பலத்த காவல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும், உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
மேற்படி வழக்கில் முழுமையான குற்றவாளி விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி வழக்கில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும். மேதகு ஆளுநர் அவர்களுக்கும் மற்றும் அவரது மாளிகைக்கும் தமிழ்நாடு காவல் துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications