தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம்.. முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை.. எடப்பாடி ஆவேச பேச்சு
சென்னை: இதுவரைக்கும் கத்தி, அரிவாளால் தான் வெட்டினார்கள். ஆனால் இப்போது வெடிகுண்டு போட ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரமும் ஆரம்பித்துவிட்டது. காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தது அதிமுக அரசு. சுமார் 1650 மருத்துவ பணியிடங்களை தோற்றுவித்தது அதிமுக அரசு. ஆனால் இன்றைய திமுக அரசில் 3 மருத்துவக் கல்லூரிக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. சுமார் 450 மருத்துவ பணியிடங்கள் பறிபோகியுள்ளது.

அம்மா இருசக்கர வாகனம் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் தற்போது காணாமல் போகியுள்ளது. இதேபோல் மாணவ செல்வங்கள், திறமையான மாணவர்களாக அறிவுசார்ந்த மாணவர்களாக உருவாக ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்ட முத்தான திட்டம் மடிக்கணினி திட்டம். அதிமுக அரசு இருக்கும் வரை தமிழ்நாட்டில் சுமார் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய விடியா திமுக அரசு இந்த திட்டத்தையும் நிறுத்தி விட்டது.
தேர்தல் பிரசாரத்தின் பொது மு.க ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் போடப்படும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள்.. ஆனால் இன்னும் கையெழுத்து போடுவதற்கு நல்ல நேரம் வரவில்லை போல.. நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.. கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆகியது.. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும் திமுகவும் தான்.. ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இதை திமுக மறைத்துவிட்டது.
அதிமுக ஆட்சியில் நீட் தேர்வில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட்டது. ஒருவர் மருத்துவம் படிக்க சுமார் ரூ.75 லட்சம் ஆகும். ஆனால் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் அரசு பள்ளியில் படித்த சுமார் 565 ஏழை மாணவர்கள் மருத்துவர் ஆகும் கனவு நிறைவேறியுள்ளது. இது தான் அதிமுக அரசின் சாதனை. அம்மா மினி கிளினிக் திட்டத்தையும் தற்போது திமுக அரசு நிறுத்தியுள்ளது. ஏழை மக்ககளுக்கு செய்கின்ற திட்டத்தை தடுக்கும் ஒரே அரசு திமுக அரசு தான்...
மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும்.. ஆனால் இன்றைய தினம் மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கும். 52 சதவீதம் மின்கட்டணம் உயர்வு.. ஆண்டுக்கு 5 சதவீதம் மின்கட்டணம் உயர்வு.. ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 சதவீதம் என 3 ஆண்டுகளில் 20 சதவீதம் உயர்த்திவிடுவார்க.. 52 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துவிட்டது. நகர்ப்புறம், பேருராட்சிகளில் வீட்டு வரியை உயர்த்திவிட்டார்கள்.. நகர்ப்புறத்தில் 100 சதவீதம் வீட்டு வரியை உயர்த்திவிட்டார்கள்.
இன்று பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அருகிலே அதிகளவில் போதைப்பொருள் நடமாட்டம் இருக்கிறது. இதனால் இளைஞர்களும், மாணவர்களும் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையையே தொலைத்துவிடுகின்றனர். இதனையும் இந்த விடியா திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இன்றைய தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கொலை தான் நடக்கிறது.
இன்றைக்கு செங்கல்பட்டில் ஒருவர் வழக்கு சம்பந்தமாக ஆஜர் ஆகும் போது வெடிகுண்டு போடுகிறார்கள். இதுவரைக்கும் கத்தி, அரிவாளால் தான் வெட்டினார்கள். ஆனால் இப்போது வெடிகுண்டு போட ஆரம்பித்துவிட்டனர். வெடிகுண்டு கலாசாரமும் ஆரம்பித்துவிட்டது. மக்கள் பதறிபோய் ஓடுகிறார்கள்.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, சந்தி சிரிக்கிற நிலை வந்துவிட்டது. ஒரு நாட்டிலே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டால் அந்த நாட்டு வளர்ச்சி பெற முடியாது. மாநிலத்தின் வளர்ச்சி முழுமையாக பாதிக்கப்படும்.
எங்கே பார்த்தாலும் போலி மதுபானங்கள் விற்பனை, கள்ளச்சாராயம் விற்பனை. திறமையற்ற அரசு. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் அரசாங்கம் இல்லை. எங்கே பார்த்தாலும் ரவுடிகளின் அராஜகம் நடக்கிறது. காவல்துறையால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக மாறியுள்ளது. காவல்துறை செயல் இழந்து இருக்கிறது. கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கொலை, வெடிகுண்டு கலாச்சாரத்தை காவல்துறை தடுத்த நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications