விநாயகர் சதுர்த்தி: 10 அடிக்கு மேல் சிலை இருக்கக் கூடாது.. பட்டாசுக்கு நோ! கடும் கட்டுப்பாடுகள்
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் நிறுவுவது, ஊர்வலம் எடுத்து செல்லுதல் போன்றவற்றிற்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் இருக்கக் கூடாது, மாட்டு வண்டியில் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல கூடாது, பட்டாசுகள் வெடிக்க கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள், அமைப்புகள் சார்பில் வீடுகள் மற்றும் தெருக்களில் விநாயகர் சிலைகளை நிறுவி, பூஜை செய்து வழிபடுவார்கள். இதையடுத்து அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். தமிழக முழுவதும் விநாயகர் சதுர்த்தியானது கொண்டாடப்படும்.

விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள், பாஜக, இந்து மக்கள் கட்சி சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த முறை அதிக இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ திட்டமிட்டு இருக்கிறார்கள். சென்னையில் இவ்வாறு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ 60க்கும் மேற்பட்ட அமைப்புகள் அனுமதி கோரியுள்ளனர்.
இந்த நிலையில் தான், விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மண்டல ஐஜிக்களுக்கு தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே பிரதிஷ்டைக்கு வைக்க வேண்டும்.
* தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நிறுவப்படும் சிலைகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம் ஆகும். பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற வேண்டும்.
* விநாயகர் சிலைகள் நிறுவும் அமைப்புகள், போலீஸ் கமிஷனரகங்கள் செயல்படும் மாவட்டங்களில் உதவி கமிஷனர்களிடம் அனுமதி பெற வேண்டும். மற்ற மாவட்டங்களில் ஆர்டிஓ / துணை ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
* மேடையுடன் சேர்த்து விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்க கூடாது.
* விநாயகர் சிலைகள் அமைக்கும் இடங்களில் ஒலிப்பெருக்கிகள் வைக்க வேண்டும் என்றால் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
* மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது என்ற விவரத்தை கடிதத்தின் மூலமாக மின்சார வாரியத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
* விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடம் மற்றும் ஊர்வலம் செல்லும் பாதைகளில் பட்டாசு வெடிக்க கூடாது.
* ஆஸ்பத்திரிகள், கல்வி நிறுவனங்கள், பிற வழிபாட்டுத்தலங்கள் அருகே விநாயகர் சிலைகள் வைக்க கூடாது.
* இதர மதத்தை சேர்ந்த மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்ப கூடாது.
* விநாயகர் சிலைகளை மினி லாரி, டிராக்டர் மூலம் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். மாட்டு வண்டி, 3 சக்கர வாகனங்களில் எடுத்து செல்லக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் என்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது. அதில், "விநாயகர் சிலைகளை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும். புதிய மற்றும் பதற்றமான இடங்களில் சிலைகள் வைத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் அதனை அனுமதிக்க கூடாது. மசூதிகளில் தொழுகை நடைபெறும் நேரங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதித்தல் கூடாது.
ஊர்வலத்தின் போது விநாயகர் சிலைகளை புதிய வழித்தடங்கள், பதற்றமான பகுதிகள் வழியாக அனுமதிக்க கூடாது. இதேபோன்று மற்ற வழிப்பாட்டுத்தலங்கள் வழியாக செல்லும் போது அதன் முன்பு பட்டாசு வெடிக்கவோ, மேள-தாளங்களை இசைக்கவோ, கோஷங்கள் போடவோ அனுமதிக்க கூடாது. விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதைகளில் உரிய அனுமதி இல்லாமல் கொடிகள் கட்டுவதையும், பேனர்கள் வைப்பதையும் தடுக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி பண்டிகை, சிலைகள் ஊர்வலம் பாதுகாப்பு ஏற்பாடு நடவடிக்கைகளை வருகிற 30ஆம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications