கனமழை.. தமிழக அரசு அலர்ட்டாக இருக்கு.. உடனடி நடவடிக்கை எடுக்கிறோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் அலர்ட்டாக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மழை பாதிப்புகள் தொடர்பாக தொலைபேசியின் மூலம் வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாளும் மழை பெய்து வருகிறது. அதிலும் தீபாவளி இரவில் தொடங்கிய மழை, நேற்று முழுவதும் நிற்காமல் பெய்து கொண்டே இருந்தது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனிடையே தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடித்து வருகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து பிற்பகலில் தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் மேலும் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு வந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
ஏற்கனவே நள்ளிரவு முதல் மழை பெய்த போதும், சுரங்கப் பாதைகள் எதிலும் மழைநீர் தேங்கவில்லை. அதேபோல் ஏரிகள், அணைகள் நிரம்பி வரும் சூழலில், மழைநீர் தேங்கும் இடங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நள்ளிரவிலும் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், காலையில் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து புகார்களை கேட்டறிந்தார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மழை பாதிப்பு தொடர்பாக தொலைபேசியில் வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் வந்த புகாரை அடுத்து, நேரடியாக அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு இருக்கிறோம்.
அதேபோல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் என்று அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் அலர்ட்டாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications