பத்திரப்பதிவு அதிரடி.. நிலுவை பத்திரங்களில் ரூ.400 கோடி வருவாய் ஈட்ட முடிவு.. தமிழக பதிவுத்துறை செம
சென்னை: பத்திரங்களில் மதிப்பு குறைபாடு உள்ளிட்ட காரணங்களால், அரசுக்கு 400 கோடி ரூபாய் வருவாய் நிலுவையில் உள்ளது.. எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி, பிரச்சனையை முடிப்பதற்காக, வருகிற மார்ச், 31 வரை சிறப்பு இயக்கம் நடத்த உள்ளதாக தமிழக பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்க உள்ளது.
வீடு, மனை வாங்குபவர்கள், அதற்கான கிரைய பத்திரத்தில் சொத்தின் மதிப்பை குறிப்பிட வேண்டும். இந்த மதிப்பு, அந்த பகுதிக்கான வழிகாட்டி மதிப்புக்கு குறைவாக இருக்க கூடாது.

புதிய மதிப்புகள்: அதாவது, வழிகாட்டி மதிப்பு என்பது, மாநில அரசாங்கத்தின்படி பதிவு செய்யக்கூடிய குறைந்தபட்ச சொத்து மதிப்பாகும். சொத்து அதிக மதிப்புக்கு விற்கப்பட்டால், அதிக மதிப்புக்கு பதிவு செய்யப்படுகிறது. அதேபோல், சொத்து வழிகாட்டி மதிப்புக்குக் குறைவாக விற்கப்பட்டால், குறைந்தபட்ச மதிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால், சில இடங்களில் வழிகாட்டி மதிப்பைவிட குறைவான மதிப்பில், பத்திரங்களை மக்கள் தாக்கல் செய்துவிடுகிறார்கள். இதுபோன்ற பத்திரங்கள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றன.. ஒருவேளை அதில், நிர்ணயிக்கப்படும் புதிய மதிப்புகளை, பத்திரத்தின் உரிமையாளர் ஏற்காமல் அப்பீல் செய்யலாம். பல இடங்களில், புதிய மதிப்புகளை ஏற்காமலும், அதை எதிர்த்து அப்பீல் செய்யாமலும் இருக்கிறார்களாம். அதனால்தான், இந்த பிரச்சனையை களைய தமிழக பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
முக்கிய உத்தரவு: இதற்காக பதிவுத்தறை முக்கிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் உள்ளதாவது: "புதிய மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அதில் வேறுபாட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்தாமல் உள்ளனர். அந்தவகையில், கடந்த 2024 அக்டோபர் 31 நிலவரப்படி, கிட்டத்தட்ட 36,134 பத்திரங்கள் நிலுவையில் உள்ளன.
இந்த பத்திரங்கள் வாயிலாக, 400 கோடி ரூபாய் வருவாய், துறைக்கு வராமல் நிலுவையில் உள்ளது.. இதில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி, பிரச்சனையை முடிக்க வேண்டும்.
அறிவுறுத்தல்: இந்த பிரச்சனையை தீர்க்க, சிறப்பு இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஜனவரி 1ல் துவங்கிய இந்த சிறப்பு இயக்கம், மார்ச் 31 வரை செயல்படுத்தப்படும். இதில் சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. அனைத்து சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்கள் இதில் கவனமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications