TN TET Exam: தந்தை - மகன் எழுதிய டெட் தேர்வு.. ரிசல்ட் பார்த்து வாயடைத்து போன குடும்பம்! நாகையில் ஸ்வீட் சம்பவம்
சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TN TET Exam) ரிசல்ட் வெளியான நிலையில், நாகையில் தந்தை மகன் இருவரும் ஒன்றாக தேர்வு எழுதி பாஸ் ஆகியுள்ளனர். அரசு ஆசிரியர் ஆகிட வேண்டும் என்ற கனவோடு போட்டி போட்டு படித்து வந்த இருவரும் தேர்ச்சி பெற்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் மகன், தந்தையை விட ஒரு மதிப்பெண் கூடுதல் பெற்றது குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் வெளியான பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் 3.32 லட்சம் பேரில் 2.27 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இதேபோன்று இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 50 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை.

TN TET Exam - ஆசிரியர் தகுதித் தேர்வு
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், 1 - 5 ஆம் வகுப்புக்கான இடைநிலை ஆசிரியர், 5 - 8 ஆம் வகுப்புக்கான பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும்.
இதில் தமிழக அரசு, தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வுகளை நடத்தில் பள்ளிகளில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பி வருகிறது. அதாவது டெட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தற்போது டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக பணியாற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருந்தது.
49.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த சூழலில் தான் தமிழகத்தில் டெட் தேர்வுகள் நடந்தன. டெட் முதல் தாள் தேர்வினை 92,417 பேர் எழுதியிருந்தனர். ரிசல்ட் வெளியான நிலையில் இதில் 45,469 பேர் தேர்ச்சி பெற்றனர். 49.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை.
இதேபோன்று டெட் தேர்வு -2 வை 3,31,900 பேர் எழுதிய நிலையில் இதில் 2.27 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை. எனினும் கடந்த ஆண்டுகளை விட தற்போது தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் நாகையில் தந்தை மகன் இருவரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நிலையில் இருவரும் தேர்ச்சி பெற்றது அக்குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தந்தையை மிஞ்சிய தமையன்
எப்படியாவது அரசு பணியில் சேர வேண்டும் என கனவோடு பலரும் படித்து வருகிறார்கள். அதிலும் ஆசிரியர் ஆகிவிட வேண்டும் என போட்டி போட்டு படிப்பவர்கள் அதிகம் என சொல்லலாம். அப்படித்தான், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த தந்தையும், மகனும் ஆசிரியர் ஆகிவிட வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து வந்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பூங்குன்றன் (வயது 55). இவர் நாகை கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வருகிறார். தனது 42வது வயதில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்று பணிக்கு சேர்ந்தார்.
86 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
இவரது மகன் ராகுல் (27) பி.இ, பி.எட். முடித்துள்ளார். இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-ஐ எழுதி இருக்கின்றனர். நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தந்தை, மகன் இருவரும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தந்தை பூங்குன்றன் 85 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மகன் ராகுல் அவரை விட கூடுதலாக ஒரு மதிப்பெண் அதாவது 86 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications