காவலர் காலிப் பணியிடங்களை இப்படி நிரப்புங்கள்... கே.எஸ்.அழகிரி முன்வைக்கும் யோசனை
சென்னை: காவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி யோசனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் புதிதாக தேர்வு நடத்தாமல் 2019-20 ஆம் ஆண்டு அனைத்து தகுதி சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களை காவலர் பணியில் அமர்த்தலாம் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பட்ஜெட் கூட்டத்தொடர்
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 8,888 இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று உடல் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்ற 20 ஆயிரம் தேர்ச்சி பெற்றவர்களில், இறுதியாக அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் 8,538 காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப காவலர்கள் நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணி நியமனமும் வழங்கப்பட்டது. மேலும் அதற்குப் பின்னரும், தமிழ்நாட்டில் காவலர் பற்றாக்குறை அதிகம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2020 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.

அரசுக்கு யோசனை
தற்போதைய சூழ்நிலையில் காவலர் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாலும், அரசின் நிதி நெருக்கடி இன்னும் அதிகமாகிவிடும் என்பதையும் கருத்தில் கொண்டு 2019-20 ஆம் ஆண்டு அனைத்து தகுதி சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களை காவலர் பணியில் அமர்த்தலாம் என்றும், அரசாங்கத்திற்கு நிதி பற்றாக்குறை ஏற்படாது என்பதையும் தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன்.

காவலர் காலிப்பணியிடம்
மேலும் 2019-2020 இல் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தகுதிச் சுற்றுகளில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களையும், தற்போது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையின் காரணமாக தேர்வு நடத்துவது கடினம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதைத் தவிர, வருகின்ற சட்டமன்றத் தேர்தலையும் கருத்தில் கொண்டு 2019-20 ஆம் ஆண்டு நடைபெற்ற காவலர் பணிக்கான அனைத்து தகுதிச் சுற்றுக்களில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரையும் காவலர் காலிப் பணியிடங்களில் நிரப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முன்னுதாரணம்
இவர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டால், தேர்வான அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மட்டும் தான் நடத்தப்பட வேண்டியிருக்கும். மேலும், இதேபோன்று, 1985, 1988, 1993, 1996, 1999, 2006 ஆகிய வருடங்களில் அதிகமாக காவலர்கள் தேவைப்பட்டதாலும், அப்போதைய சூழ்நிலையில் அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னரும், மீதமுள்ளவர்கள் நான்கு பிரிவுகளாக காவலர் பணியில் தேர்வு செய்யப்பட்டு, பணியில் அமர்த்தப்பட்டு, தற்போது காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

உதவிக்கரமாக
மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு காவலர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னரும், மீதமுள்ள அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். தற்போதுள்ள காவலர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் காவலர்களின் பணிச் சுமை குறைந்து உதவிகரமாக இருக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.












Click it and Unblock the Notifications