என்ன பாதிப்பேரை காணோம்.. டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆப்சென்ட் ஆனது இத்தனை பேரா? வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நேற்று ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியது. 92,495 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று நடந்த எழுத்துத் தேர்வில் கிட்டத்தட்ட 48 சதவீதம் பேர் கலந்து கொள்ளவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு தேர்வை நடத்தியது. காலியாக உள்ள 1033 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மே 21ஆம் தேதி வெளியிடப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு
தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 25ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வை எழுதுவதற்கு 92,495 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த நான்காம் தேதி முதல் 10ம் தேதி வரை காலை, மாலை என இரண்டாம் தாள் தேர்வு வாரியாக கணினி வழியில் நடைபெற்றது. நேற்று முதல் தாள் தேர்வு நடந்தது. அதில் தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவியல், திறனறிவு மற்றும் மனக்கணக்கு தேர்வு ஓஎம்ஆர் விடைத்தாள் மூலம் நடைபெற்றது.
நேற்று தேர்வு
இந்த தேர்வை நேற்று தமிழ்நாடு முழுவதும் 48,627 பேர் எழுதி இருந்தனர். அதே நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 43 ஆயிரத்து 882 பேர் கலந்து கொள்ளவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது விண்ணப்பித்தவர்களில் கிட்டத்தட்ட 48 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதன்முறையாக விண்ணப்பித்தவர்களில் பாதிக்கு பாதிப்பேர் தேர்வில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. இன்றும் எழுத்து தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் ஏன் இத்தனை பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
47 விதமான பதவிகள்
உதவி பொறியாளர் (சிவில்), உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), உதவி பொறியாளர் (அமைப்பியல்), உதவி பொறியாளர் (வேளாண் பொறியியல்), இளநிலை மின் ஆய்வாளர், வேளாண் அலுவலர் (விரிவாக்கம்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், மீன்வள ஆய்வாளர், நூலகர் (கிரேடு-2), இளநிலை அறிவியல் அலுவலர், உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு), கணினி மேலாளர், திட்ட அலுவலர், சமூக அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1) உள்ளிட்ட 47 விதமான பதவிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் 615 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப கலை அறிவியல் பட்டதாரிகள், பிஇ, பிடெக் பட்டதாரிகள், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
உரிய விசாரணை
கணினி வழியாக நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்தவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் கலந்து கொண்ட நிலையில் முதல் தாள் தேர்வில் கிட்டத்தட்ட 43 ஆயிரத்து கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications