டிஎன்பிஎஸ்சி தேர்வில் கவனிச்சீங்களா! சமக்ர சிக்ஷா திட்ட நிதியை நிறுத்தியது பற்றி இடம் பெற்ற கேள்வி
சென்னை: டிஎன்பிஎஸ்சி நேற்று நடத்திய தொழில் நுட்ப பணிகளுக்கான தேர்வில் சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை நிறுத்திய மத்திய அரசு குறித்த கேள்வி இடம் பெற்றுள்ளது. தமிழகத்திற்கு கல்வி நிதி ரூ.2,192 கோடியை மத்திய அரசு வழங்காத நிலையில், அது தொடர்பான கேள்வி தேர்வில் இடம் பெற்றிருக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி 1,033 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நேர்முகத்தேர்வு இல்லாத தொழில் நுட்ப பணிகளுக்கான பணியிடங்களுக்கு கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியானது. உதவிப் பொறியாளர், இளநிலை திட்ட அமைப்பாளர், வேளாண் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடைபெற்றது.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேள்வி
இன்ஜினியரிங் உள்ளிட்ட படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 92,509 பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில், தமிழ் மொழி தேர்வு, பொது அறிவு, திறன் தேர்வு, மொழி பெயர்ப்பு ஆகிய வினாக்கள் அடங்கிய தேர்வு நேற்று நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மையங்களில் இந்த தேர்வானது நடைபெற்றது. விண்ணப்பித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்வை நேற்று எழுத வரவில்லை. 92 ஆயிரம் விண்ணப்பித்து இருந்த நிலையில், 48,627 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதற்கிடையே, நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில், சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை நிறுத்திய மத்திய அரசு குறித்த கேள்வி இடம் பெற்றுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியின் விவரம் வருமாறு:-
கூற்று காரணம் வகை:
கூற்று: அரசுப் பள்ளிகளில் இந்தித் திணிப்பை தமிழ்நாடு நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. மேலும் எழுச்சி பெறும் இந்தியாவிற்கான பிரதம மந்திரி பள்ளிகளில் இணைய மறுத்துவிட்டது. எனவே ஒன்றிய அரசு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை நிறுத்தி வைத்துள்ளது.
காரணம்: தமிழக அரசின் இரு மொழி கொள்கையையும் மற்றும் தேசிய அளவில் சரியாக அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும் மத்திய அரசு அங்கீகரித்தாலும், 2020 ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையின் மூலம் அது பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள துறைகளில் தனது பங்களிப்பை வழங்க விரும்புகிறது. இது தமிழக அரசால் கூட்டாட்சி நிர்வாக முறை என்ற கருத்திற்கு எதிரானதாகக் கருதப்பட்டு கடுமையாக எதிர்க்கப்படுகிறது.
(A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
(B) கூற்றும் காரணமும் சரி, ஆயினும் காரணமே கூற்றிற்கான சரியான விளக்கம்
(C) கூற்று தவறு, காரணம் சரி
(D) கூற்றும் காரணமும் சரி ஆயினும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
(E) விடை தெரியவில்லை
என்ற கேள்வி இடம் பெற்று இருந்தது
கனவு இல்லத் திட்டம்
கடந்த மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பான கேள்விகள் இடம் பெற்று இருந்தது நினைவிருக்கலாம். தமிழ்நாடு அரசின் கனவு இல்லத் திட்டம் பற்றிய கேள்வி, மகளிர் உரிமைத் தொகை திட்டம் பற்றிய கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
இல்லம் தேடி கல்வித் திட்டம், விடியல் பயணத் திட்டம், தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டம் சார்ந்த வினாக்கள், அகழ்வாராய்ச்சி குறித்து ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 3 வினாக்கள், இஸ்ரோ சார்ந்த ஒரு வினா, திராவிட மொழி சார்ந்த ஒரு வினா என பல கலவைகளை கொண்ட வினாத்தாளாக'' இருந்தது.












Click it and Unblock the Notifications