சிம்புவின் மாநாடு படத்திற்கு புதிய சிக்கல்.. தமிழக சுகாதார துறைக்கு பறந்த புகார்.. அடுத்து என்ன??
சென்னை: மாநாடு திரைப்படம் மற்றும் யூடியூபில் உள்ள டீசர்களில் நடிகர் எஸ் ஜே சூர்யா புகை பிடிக்கும் காட்சியில் 'புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு' என்ற எச்சரிக்கை வாசம் இல்லை எனத் தமிழக சுகாதாரத் துறையிடம் Tobacco Montior என்ற அமைப்பு புகார் அளித்துள்ளது.
சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் எஸ். ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.
டைம் லூப் கான்சேப்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாநாடு
ரிலீஸ் சமயத்திலேயே மாநாடு திரைப்படம் நிறையப் பிரச்சினைகளைத் தாண்டித்தான் வெளியானது. படத்தின் ரிலீசுக்கு முந்தை நாள் மாலை, சில தவிர்க்க முடியாத காரணங்களால் பட வெளியீட்டைத் தள்ளி வைப்பதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இருப்பினும், இரவில் இயக்குநர் வெங்கட் பிரபு படம் திட்டமிட்டபடி நவ. 25ஆம் தேதி வெளியாகும் என ட்வீட் செய்ய, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இருப்பினும், காலை 5 மணிக் காட்சி அனைத்து பகுதிகளிலும் ரத்து செய்யப்பட்டன.

அடுத்த சிக்கல்
காலை 9 மணிக்குப் பின்னரே படம் ரிலீஸ் ஆனது. படத்தின் கதை, எடிட்டிங் சிம்பு, எஸ்கே சூர்யா ஆகியோரின் நடிப்பு ஆகியவற்றைப் படம் பார்த்த அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் சிம்புவுக்கு மிகச் சிறந்த ஒரு கம்பேக் படமாக இது அமைந்துள்ளதாக அனைவரும் வரவேற்று வருகின்றனர். இந்தச் சூழலில் Tobacco Montior என்ற அமைப்பு மாநாடு திரைப்படத்தின் மீது புகார் அளித்துள்ளது.

எச்சரிக்கை வாசகம்
அதாவது மாநாடு திரைப்படம் மற்றும் யூடியூபில் உள்ள டீசர்களில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா புகை பிடிக்கும் காட்சியில் 'புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு' என்ற எச்சரிக்கை வாசம் இல்லை எனத் தமிழக சுகாதாரத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், "புகை பிடிப்பதை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு காட்சியில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கும்போது, குழந்தைகளும் இளைஞர்களும் அதில் எளிதாக ஈர்க்கப்படுவார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

நடவடிக்கை தேவை
அப்படி இருக்கும் போது, மாநாடு திரைப்படத்திலும் யூடியூபில் உள்ள டீசர்களில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா புகை பிடிக்கும் காட்சியில் 'புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு' என்ற எச்சரிக்கை வாசம் இல்லை. எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை ஆராய்ந்து தமிழக சுகாதாரத் துறை விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இதே அமைப்பு தான் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, பள்ளி ஒன்றில் படக்குழுவினர் பொறுப்பற்ற முறையில் புகை பிடித்ததாகப் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக
முன்னதாக வன்முறையைத் தூண்டும் வகையிலும் இந்து - முஸ்லீம் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதமாகவும் படம் உள்ளதால் மாநாடு படத்தை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்திருந்தார். மாநாடு திரைப்படத்தில் கோவைக் குண்டு வெடிப்பு குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளதாகவும் மத அடையாளங்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தத் திரைப்படத்தைத் தமிழக அரசு தடை செய்யச் செய்யவில்லை என்றால் பாஜக போராட்டம் நடத்தும் என்றும் அவர் கூறியிருந்தார்,












Click it and Unblock the Notifications