அதிமுக- பாஜக கூட்டணி இப்போதும் இல்லை, எப்போதும் இல்லைனு சொன்னாரே ஜெயகுமார்! இப்படி ஒட்டிகிட்டாங்களே
சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்பது இப்போதும் இல்லை, இனி எப்போதும் இல்லை, பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் வெளிப்படையாகவே பேசியிருந்த நிலையில் தற்போது அதிமுக- பாஜக கூட்டணி அமைந்துவிட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1998ஆம் ஆண்டு வாஜ்பாய் காலத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தது. அதன் பிறகு பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என தெரிவித்திருந்தார். 2014 ஆம் ஆண்டு கூட லேடியா இல்லை மோடியா என முழங்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

அந்த தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வென்றது. அவருடைய மறைவுக்கு பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்ஸும் பாஜகவுடன் கூட்டணி வைத்தார்கள்.
லோக்சபா தேர்தல்
இந்த நிலையில் அந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அது போல் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் அதிமுக ஆட்சி அமைக்கவில்லை. இதன் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம் ஒரு கூட்டத்தில் பேசிய போது, அதிமுகவால்தான் நாம் தோற்றோம் என பேசியிருந்தார்.
பாஜக பதிலடி
இது போல் ஒவ்வொருவராக பேசுவதும் அதற்கு பாஜக பதிலடி கொடுப்பதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இதனால் அதிமுகவினர் கொந்தளித்துவிட்டனர். இதையடுத்து அண்ணாமலையை டெல்லி தலைமை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.
அண்ணா குறித்து அண்ணாமலை
இந்த நிலையில் அண்ணா குறித்தும் அண்ணாமலை பேசியதும் திமுக, அதிமுக கட்சிகள் கொதித்துவிட்டன. அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்துதான் செப்டம்பர் 18ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை
அவர் பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை. நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி, அண்ணாமலைக்கு வயதுக்கு மீறிய பதவி கிடைத்ததால் தலைகால் புரியாமல் ஆடுகிறார் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் அதிமுக- பாஜக கூட்டணியும் முறிந்தது.
2026 லும் இல்லைன்னாங்களே
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றே கூறிவந்தார். 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றே எடப்பாடி பழனிசாமி கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பில் எப்போது கூட்டணி குறித்து கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என நாங்கள் ஏற்கெனவே கூறிவிட்டோமே, திரும்ப திரும்ப கேட்டால் எப்படி? என கேள்வி எழுப்பியிருந்தார்.
ஜெயக்குமார்
அது போல் ஜெயக்குமாரும் எப்போது பேட்டி கொடுத்தாலும் பாஜகவுடன் இப்போதும் இல்லை, இனி எப்போதும் இல்லை, பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றே கூறி வந்தார். அவரை தவிர மற்ற மூத்த நிர்வாகிகளிடம் பாஜகவுடன் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினால், அது குறித்து எடப்பாடியார்தான் முடிவு எடுப்பார் என கூறிவிட்டனர்.
அமித்ஷாவுடனான பிரஸ்மீட்
கடந்த இரு ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என தீர்த்து சொல்லி வந்த எடப்பாடி பழனிசாமி, அண்மையில் ஒரு பிரஸ் மீட்டில் இன்னும் 6 மாதம் இருக்கிறது, அதற்குள் என்ன அவசரம் என கேள்வி எழுப்பியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் இன்று பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டார். அமித்ஷாவுடனான பிரஸ்மீட்டில் கூட எடப்பாடி பழனிசாமிக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications