“கை” தூக்கும் காங்கிரஸ்.. சென்னையில் இன்று மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்! எப்போது?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள்.
இலங்கை கடற்படை தமிழ்நாடு மீனவர்களை தொடர்ந்து கைது செய்வது, தாக்குவது, படகுகள், வலைகளை சேதப்படுத்துவது, மீனவர்களை சுட்டுக் கொல்வது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த திங்கட்கிழமை மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க திரும்பிய நிலையில் ராமேஸ்வரத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இன்று தூத்துக்குடி செல்லும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து சென்னையில் கருப்புக் கொடி போராட்டத்தில் காங்கிரஸ் ஈடுபட உள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்க தவறிய ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ., சு.திருநாவுக்கரசர், எம்.பி., எம். கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் புதன் கிழமை காலை 10.30 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும்.
சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.சி., எம்.எஸ். திரவியம், எம்.சி., ஜெ. டில்லிபாபு, எம்.சி., எம்.பி. ரஞ்சன்குமார், திரு. எம்.ஏ. முத்தழகன், திரு. அடையாறு த. துரை ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்துவார்கள். இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள், மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பார்கள்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
முன்னதாக காலை தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து மண்டபங்களில் தங்க வைத்து உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications