மெட்ராஸ் "சென்னை" ஆன நாள் இன்று.. 28 வருடம் ஆச்சு.. இந்த வரலாறு தெரியுமா?
சென்னை: மெட்ராஸ், அதிகாரப்பூர்வமாக சென்னை ஆன நாள் இன்று. மெட்ராஸ் என ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் எழுதப்பட்டு வந்த நிலையில், "சென்னை" என்று ஒரே பெயரில் மட்டுமே குறிப்பிட வேண்டும் என அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்த நாள் இன்று.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உலகெங்கிலும் இருந்து வர்த்தகர்கள் கடற்கரை நகரமான சென்னையைத் தேடி வந்துள்ளனர். 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர் சென்னைப் பகுதிக்கு வந்தனர். 1522-ல் சாந்தோம் என்ற துறைமுகத்தை நிறுவினர். அப்போது அவர்கள்தான் சென்னையை 'மெட்ராஸ்' என அழைத்தனர். இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைக் கொண்டது மதராஸ்.

17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால்பதித்த பின்னர், இந்த நகருக்கு வேறு விதமான அடையாளங்கள் வந்தன. 1639-ல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் செயின்ட் ஜார்ஜ் கோட்டை இப்போது உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன் நாயக்கர், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கர் நினைவாக, கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னைப் பட்டினம் என்று பெயரிடப்பட்டது.
தற்போதைய சென்னை ஐகோர்ட் கட்டிடம் உள்ள இடத்தில் சுமார் 365 ஆண்டுகளுக்கு முன்பு சென்னகேசவர் கோவில் ஒன்று இருந்ததாகவும், அதனால் சென்ன கேசவபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் சென்னை என்று பெயர் வந்ததாகவும் ஒரு கூற்று உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. இப்படியாக பொருளாதார அடிப்படையில் செல்வாக்கான நகரமாக வளர்ந்தது மதராஸ். சுதந்திரத்துக்குப் பின்னர், 1947-ல் மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக மெட்ராஸ் தேர்வானது. மதராஸ் என்பதை "மெட்ராஸ்" என்று பிற மொழிகளில் எழுதினார்கள்.
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதுவரை மதராஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட மாநிலம் 1969-ல் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றப்பட்டது. எனினும், மெட்ராஸ், சென்னை என்று இரண்டு பெயர்களில் இந்த நகரம் அழைக்கப்பட்டு வந்தது. எனவே சென்னை நகரின் பெயரை சென்னை என்று ஒரே பெயரில் மட்டுமே எல்லா மொழிகளிலும் குறிப்பிட வேண்டும் தமிழக அரசு முடிவு செய்தது. அந்த காலகட்டத்தில் தான் பம்பாய் நகரத்தின் பெயரும் மும்பை என மாற்றப்பட்டது.
1996 ஜூலை 17 ஆம் தேதி அன்றைய தமிழக முதலமைச்சர், மு. கருணாநிதி, இனி சென்னை என்றே அழைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார். 'மெட்ராஸ்' அதிகாரப்பூர்வமாக 'சென்னை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலும் "சென்னை" என்றே அழைக்கவேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பல தரப்பினரும் வரவேற்றனர்.
அன்றைய காலகட்டத்தில் அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன், "சென்னப்பட்டினம் என்பதன் சுருக்கம்தான் சென்னை என்று அழைக்கப்படுகிறது. தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி, சென்னை என்ற பெயரே எல்லா மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது." என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த குமரி அனந்தன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரும் வரவேற்றனர். குமரி அனந்தன் வெளியிட்ட அறிக்கையில், "மெட்ராஸ்" என்று அழைக்கப்படுவதற்கு பதிலாக எல்லா மொழிகளிலும் சென்னை என்று அழைக்கப்பட வேண்டும் என்ற அரசின் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது" என்று குறிப்பிட்டு இருந்தார்.
பழ.நெடுமாறன் விடுத்த அறிக்கையில், "மெட்ராஸ் என்பதை இனி சென்னை என எல்லா மொழிகளிலும் அழைக்கப்படும் என்ற முதல் அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். அதைப் போல தமிழகத்தில் பல ஊர்ப்பெயர்கள் இடைக்காலத்தில் வடமொழியில் மாற்றம் செய்யப்பட்டன. அவற்றின் தமிழ்ப் பெயர்களை மீண்டும் நிலை நிறுத்தும்படி வேண்டுகிறேன்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications