சென்னையை அடுத்த நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் கிடையாது.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2 பணிகள் நடந்து வருவதால், பழைய மகாபலிபுரம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூரில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுவது இன்று முதல் நிறுத்தி வைக்கப்படுகிறது.
சென்னையை அடுத்த ராஜீவ் காந்தி சாலை மெட்ரோ ரயில் பணி தொடங்கியதை தொடர்ந்து, நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதை அகற்ற வேண்டும் என்று ராஜீவ் காந்தி சாலையை ஒட்டியுள்ள மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதாவது, குறுகலாக மாறி, தரமில்லாத சாலைக்கு அரசு தரப்பில் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என்பதே வாகன ஓட்டிகளின் கேள்வியாக இருந்தது.

மத்திய கைலாஷில் இருந்து ஆறு வழிச்சாலைக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதலில் சோழிங்கநல்லூர் சிக்னல் வரை மட்டுமே பணிகள் நடைபெறும் என நினைத்திருந்த நிலையில், தற்போது சோழிங்கநல்லூர் - நாவலூர் இடையே தடுப்புகள் வைத்து பணிகள் நடக்கின்றன. சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. பீக் நேரங்களில் வாகன ஓட்டிகள் நிலைமை கடும் திண்டாட்டமாக உள்ளது.
சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் இல்லாவிட்டாலும் கூட, மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதியாக ஒ.எம்.ஆர் பகுதி உள்ளதால், வார இறுதி நாட்களிலும் ஒவ்வொரு நாளும் நீண்ட வரிசையில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதனால், இங்கு கட்டண வசூல் தேவையில்லை என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருந்தது.
இந்த நிலையில், தான், நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் கிடையாது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று கூறும் போது, " தென் சென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்த அரசு பதவியேற்றவுடன் ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப சாலையில் உள்ள பெருங்குடி சுங்கச் சாவடியில் சாலை பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது. இதனால் இப்பகுதி வழியாக செல்வோரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தார்கள்.
தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இதனால் சாலையின் பலப்பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இதே சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று நாவலூர் சுங்க சாவடியில் சுங்க கட்டணம் வசூல் செய்வது நிறுத்தி வைக்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் .












Click it and Unblock the Notifications