டோல்கேட்களை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுப்போம்.. அதிமுக தேர்தல் வாக்குறுதி! திமுகவை போலவே இருக்கே!
சென்னை: சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு பதிலாக +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதியே தொடங்கிவிட்டது. திமுக தேர்தல் அறிக்கை கடந்த 20ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்பு செயலாளர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, ஓ.எஸ்.மணியன், மகளிரணி செயலாளர் பா.வளர்மதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி. உதயகுமார், இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் ஆகிய 10 பேர் கொண்ட குழுவை பழனிசாமி அமைத்திருந்தார்.
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர், தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி முதல் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 9 மண்டலங்களில் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களிடம் கருத்துகளை கேட்டனர். பிப்ரவரி 10 தேதி சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தனர். அதன் அடிப்படையில், அக்குழுவினர் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி, வரைவு தேர்தல் அறிக்கையை தயாரித்து எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.
தொடர்ந்து, அதிமுக தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து, முழுவீச்சில் தேர்தல் பணிகளை ஆற்ற உள்ளது அதிமுக.
அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும் என திமுகவும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, நீட் தேர்வுக்கு மாற்றாக 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தப்படும் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications