விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?.. போட்டுடைத்த டிடிவி தினகரன்
சென்னை: தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணிக்கும் தவெக கூட்டணிக்கும்தான் கடும் போட்டி இருக்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "பீகார் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்று நான் நம்பவில்லை. தேர்தல் ஆணையம் எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் தற்போது திமுக ஆட்சிதான். எஸ்ஐஆர் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் ஈடுபட்டுள்ளனர். எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து அதைச் சரியாக செய்யும்போது தேர்தல் ஆணையம் என்ன செய்ய முடியும்.

தவெக உடன் கூட்டணிக்கு முயற்சிக்கிறேன் என்று தொலைக்காட்சிகளில் சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. நாங்கள் இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை. சில கட்சிகள் எங்களுடன் கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள், அது உண்மை. ஆனால், எந்தக் கட்சி என்று இப்போது சொல்ல முடியாது. எந்தக் கட்சியையும் நான் தேடிப்போக வேண்டிய அவசியமில்லை. ஆனால், அமமுக இல்லாமல் எந்த கூட்டணியும் வெற்றி பெறாது. வரும் தேர்தலில் நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.
தமிழ்நாட்டில் 2026 இல் ஆளுங்கட்சி கூட்டணிக்கும், தவெக கூட்டணிக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று நினைக்கிறேன். மற்றவர்கள் சொல்லும் கருத்தை வைத்துதான் நடுநிலையாக நான் இதைச் சொல்கிறேன். அதற்காக நான் கூட்டணிக்குச் செல்கிறேன், அந்த சமிக்ஞைக்காக நான் பேசுகிறேன் என்று அர்த்தமல்ல. சர்வேக்களை வைத்து நடுநிலையாக யதார்த்தத்தைச் சொல்கிறேன்.
எங்களைப் பொருத்தவரை துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. பழனிச்சாமி எங்களுக்கு துரோகம் செய்திருக்கார். அதனால், அவருக்கு எங்களை சந்திப்பதிலேயே தயக்கம் உள்ளது. யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்தோமோ, எந்த துரோகம் வென்றுவிடக் கூடாது என்று நினைத்ததோ அது நடந்தது" என்றார்.












Click it and Unblock the Notifications