சாட்சி சொன்ன டிஆர் பாலு.. அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கில் பரபரப்பு.. இன்று நடந்தது என்ன?
சென்னை: திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட நிலையில் அவருக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் டிஆர் பாலு அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று சாட்சியம் அளித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளும் திமுக அரசு மீதும், திமுக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மீதும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி அண்ணாமலை திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதோடு மட்டுமின்றி திமுகவினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்தார். இதையடுத்து அண்ணாமலைக்கு திமுக தலைவர்கள் நோட்டீஸ்கள் அனுப்பினர். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கூறினர்.

இதற்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்தார். மன்னிப்பு கேட்க முடியாது. தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன. ஆதாரத்தின் அடிப்படையில் தான் தகவல்கள் வெளியிடப்பட்டன என தெரிவித்தார். இதற்கிடையே தான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வர் முக ஸ்டாலின் சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு 8 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக எம்பியும், திமுக பொருளாளருமான டிஆர் பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக அவரது மனுவில், ‛‛1957ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்பியாகவும், மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளேன். திமுகவிலும் பல பொறுப்புகளில் இருக்கிறேன். எனக்கு பொதுவெளியிலும், மக்களிடமும் நல்ல பெயரும், மரியாதையும் உள்ளது.
இதற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக கூறியுள்ளார். எனது குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் 3 நிறுவனங்களில் மட்டுமே சிறிய முதலீடு உள்ளது. இதனால் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த அண்ணாமலை மீது நஷ்டஈடு வழங்க வேண்டும். அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தொடர்ந்து நீதிமன்றத்துக்கு டிஆர் பாலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். திமுக எம்பியும், வழக்கறிஞருமான வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். டிஆர் பாலு சாட்சி கூறினார். அதன்பிறகு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து திமுக எம்பி வில்சன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த வழக்கில் சாட்சியை ஆய்வு செய்த பிறகு நீதிமன்றம் அடுத்த நடவடிக்கையை எடுக்கும். போன வாய்தாவில் வழக்கு தொடரப்பட்ட நோக்கம் பற்றி நீதிமன்றத்தில் கூறினோம். உண்மைக்கு புறம்பாக, வேண்டுமென்றே, கெட்ட எண்ணத்தோடு அண்ணாமலை இதனை தெரிவித்துள்ளார். 14.04.2023ல் அனைவரையும் பற்றியும் அவதூறான கருத்துகளை அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டிஆர் பாலு வழக்கு தாக்கல் செய்தார். சாட்சி சொல்லியிருக்கிறார். அண்ணாமலை இந்த வழக்கை சந்திக்க வேண்டும். அண்ணாமலை வழக்குக்கு பயந்து நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்க கூடாது. இதனை தான் எங்கள் பொருளாளர் விரும்புகிறார்'' என்றார்.












Click it and Unblock the Notifications