சென்னை மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் மே முதல் போக்குவரத்து மாற்றம்.. ரெடியாகும் புதிய பாதை
சென்னை: 2வது கட்டமாக நடைபெறும் சென்னை மெட்ரோ இரயில் திட்ட பணியில் வழித்தடம் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை வருகிறது. இந்த பணிக்காக சென்னை நந்தம்பாக்கத்தை ஒட்டி, மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் மே மாதம் முதல் வாரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை, சென்டர் முதல் பரங்கிமலை இரு வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் துரத்திற்கு உள்ளது. கோயம்பேடு திருமங்கலம் வழியாக ஒரு வழியும், பரங்கிமலை, சைதாபேட்டை வழியாக வழித்தடங்கள் இருக்கின்றன உள்ளது.. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. ஒரு மாதத்திற்கு பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை சுமார் 90 லட்சத்தை நெருங்கி உள்ளது.

முதல் கட்ட மெட்ரோ ரயிலுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித் தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் மாதவரம் முதல் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சிப்காட் 2வரை 45.4 கிமீ நீளத்திற்கு 3வது வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதில் 19 கிலோ மீட்டர் மேம்பாலத்திலும், 26.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமிக்கு அடியிலும் பாதை செல்கிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 49 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
சென்னையில் 4வது மெட்ரோ வழித்தடம் மெரினா கலங்கரை விளக்கம் முதல் - பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை அமைக்கப்படுகிறது. 26.09 கிமீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் 16.02 கிமீ தூரம் மேம்பாலத்திலும், 10.07 கிமீ தூரம் நிலத்திற்கு அடியிலும் அமைகிறது. இந்த வழித்தடத்தில் 28 ரயில்கள் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
சென்னையில் 5வது மெட்ரோ வழித்தடம், மாதவரம் பால் பண்ணை மற்றும் சோழிங்கநல்லூர் இடையே அமைகிறது. 44 .6 கிமீ தூரத்திற்கு அமையும் இந்த வழித்தடத்தில் 38.77 கிமீ தூரம் மேம்பாலத்திலும், 5.83 கிமீ தூரம் நிலத்திற்கு அடியிலும் அமைகிறது. இந்த வழித்தடத்தில் 48 ரயில்கள் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் பணிக்காக பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல், நந்தம்பாக்கம் மெட்ராஸ் போர் கல்லறை, பட்ரோடு மற்றும் பால் வெல்ஸ் ரோடு ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ இரயில் பணிகளுக்காக தற்காலிக போக்குவரத்து மாற்றம் மே 2024 முதல் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 118மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.வழித்தடம் 5-ல் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.), ECV-02 (உயர்மட்ட கட்டுமானம்)தொகுப்பு கோயம்பேட்டிலிருந்து தொடங்கி காளியம்மன் கோயில் தெரு, மவுண்ட்-பூந்தமல்லி சாலை, பட் ரோடு, உள்வட்டச் சாலை வழியாக மேடவாக்கம் பிரதான சாலையுடன் ஒன்றிணைந்து சோழிங்கநல்லூர் வரைதொடர்கிறது.
நந்தம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் போர் கல்லறை, பட் ரோடு மற்றும் பால் வெல்ஸ் ரோடு போன்ற சிலஇடங்களில் தற்போதுள்ள சாலையின் அகலம் குறுகலாக உள்ளதால், இந்த இடங்களில் கட்டுமானப் பணிகளைமேற்கொள்ள, மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் போரூரில் இருந்து தற்காலிகமாக ஒருவழிப் போக்குவரத்தை திசை திருப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான காலி நிலத்தில் போர்கல்லறை, டிஃபென்ஸ் காலனி 1வது அவென்யூ, கண்டோன்மென்ட் சாலைகள், தனகோட்டி ராஜா தெரு, சிட்கோதொழிற்பேட்டை தெற்கு சாலை, ஒலிம்பியா சந்திப்பு வழியாக இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான நிலத்தின் வழியாக பரிந்துரைக்கப்பட்ட தற்காலிக சாலை போக்குவரத்து மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. இதனை ஏற்கனவே தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக நிறுவனம் மற்றும் கன்டோன்மென்ட் போன்ற பிறதுறைகள் ஏற்றுக்கொண்டுள்ளன. பால்வெல்ஸ் சாலை மற்றும் பட் ரோடில் மெட்ரோ பணிகள் முடியும் வரை இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சாலை போக்குவரத்து மாற்றத்திற்கான மேற்கண்ட நிலம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது புதர்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாலை மேம்பாட்டு பணிகள் 2 மாதங்களில் முடிக்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட தற்காலிக சாலை போக்குவரத்து மாற்றம் மே 2024 முதல் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும்." இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications