4 நாள் ஜாலி..விட்டாச்சு லீவு! சென்னையிலிருந்து மொத்தமாய் கிளம்பிய மக்கள்..கிளாம்பாக்கமே திணறிருச்சே!
சென்னை: ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்கள் உள்ளிட்ட தொடர் விடுமுறையால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களிலுள்ள சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் அருகே கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இங்கிலாந்திடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதன் நினைவாக 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதியான நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுல்லாது சனி, ஞாயிறு வார விடுமுறையாக இருக்கும் நிலையில், இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது. ஆனால், அன்று விடுமுறை எடுக்க நினைத்திருக்கும் மக்களுக்கு, 4 நாட்கள் தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமையை தவிர வரும் 2 நாட்கள் தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே விடுமுறை நாட்களாக உள்ள நிலையில், 16ம் தேதிக்கு கூடுதலாக விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும், அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் சொந்த ஊர் செல்ல வேண்டுமென குழந்தைகளும் அடம் பிடிப்பதாக கூறுகின்றனர் பெற்றோர்.
இதன் காரணமாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக தென் மாவட்டங்களுக்கு சென்னை வாசிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையில், கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், சென்னை நகருக்குள் நெரிசல் ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் படையெடுத்ததால் நகரின் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் இன்னலை சந்திக்க வேண்டியதாயிற்று. குறிப்பாக வடபழனி, கிண்டி, கத்திப்பாரா உள்ளிட்ட சந்திப்புகளில் இஞ்ச் பை இஞ்சாக வாகனங்கள் ஊர்வதால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதேபோல் தாம்பரம், ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பல இடங்களில் வாகன போக்குவரத்து வழக்கத்தை விட அதிகரித்து ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இரவு 8 மணிக்கு மேலும் போக்குவரத்து வேகமடையாமல் சுணக்கமாகவே இருந்தது. குறிப்பாக அதிகமான வாகனங்கள் வருவதால் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு பாலப் பணிகள் நடைபெற்று வருவதாலேயே நெரிசல் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர் மக்கள்.
அதே நேரத்தில் கிளாம்பாக்கத்திலும் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் அரசு பேருந்து நிறுத்துமிடங்களில் பயணிகள் குவிந்தனர். மேலும் ஆம்னி பேருந்து நிறுத்தத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. மக்கள் நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை நடப்பதாக புகார் கூறுகின்றனர் பயணிகள். தொடர் விடுமுறை பயன்படுத்தி ஆம்னி பேருந்து அதிகமான கட்டணம் வசூலிப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications