நெடுஞ்சாலைகளில் நெரிசல் ஏன்? வளர்ச்சியா? வீழ்ச்சியா? தவாக வேல்முருகன் அழுத்தமான பதிவு
சென்னை: நெடுஞ்சாலைகளில் நெரிசல் ஏன்? வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்ற கேள்வி எழுப்பியுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "விடுமுறைகளை முடித்துவிட்டு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களை நோக்கி இலட்சக்கணக்கான மக்கள் திரும்பும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு நெடுஞ்சாலைகளில் கடுமையானப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பது மீண்டும் ஒருமுறை வளர்ச்சியின் சமநிலையற்றத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "விடுமுறைகளை முடித்துவிட்டு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களை நோக்கி இலட்சக்கணக்கான மக்கள் திரும்பும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு நெடுஞ்சாலைகளில் கடுமையானப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பது மீண்டும் ஒருமுறை வளர்ச்சியின் சமநிலையற்றத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

சாலைகளை அகலப்படுத்துவதாலும், புதிய மேம்பாலங்களை அமைப்பதாலும் மட்டும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது. மக்கள் ஏன் பெருநகரங்களை நோக்கிக் குவிகிறார்கள் என்ற அடிப்படை கேள்விக்கே பதில் காண வேண்டும்.
மக்களாட்சி என்பது தேர்தல் நடத்துவதோ, ஆட்சியை அமைப்பதோ மட்டுமல்ல. மக்கள் வாழும் இடங்களுக்கு அருகிலேயே தரமான கல்வி, நிலையான வேலைவாய்ப்பு, உயர்தர மருத்துவ வசதிகள், தொழில் வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றத்திற்கான கட்டமைப்புகள் ஆகிய அனைத்தையும் உருவாக்கித் தருவதே உண்மையான மக்களாட்சியாகும்.
ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் வேலைக்காகத் தலைநகரை நோக்கி ஓட வேண்டிய அவசியமில்லாத நிலை உருவாக்க வேண்டும். ஒரு குடும்பம் மருத்துவ சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கக் கூடாது. உயர்கல்விக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியேற வேண்டிய சூழல் மாற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் அப்பகுதி மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வகையில் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மையங்கள், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளாகங்கள், வேளாண் சார்ந்த மதிப்புக்கூட்டுத் தொழில்கள் ஆகியவை உருவாக்கப்பட்டால், மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களிலேயே முன்னேற்றம் காண முடியும்.
அப்போது பெருநகரங்களை நோக்கிய மக்கள் பெருக்கம் குறையும். நெடுஞ்சாலை நெரிசல்கள் குறையும். நகரங்களில் மனிதர்கள் நெருக்கடிக்குள் வாழும் நிலை மாறும். எரிபொருள் வீணடிப்பும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். குடும்பங்களின் பயணச் செலவுகள் குறைந்து பொருளாதாரச் சேமிப்பு அதிகரிக்கும்.
எனவே தமிழ்நாட்டின் வளர்ச்சியை, சில நகரங்களுக்குள் மட்டுமே குவிக்கும் கொள்கையை கைவிட்டு, மாவட்டம்தோறும் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் பரவலாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அரசு முன்னெடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
மக்களை வளர்ச்சியைத் தேடி நகரங்களுக்கு அனுப்புவதல்ல நல்லாட்சி. மக்கள் வாழும் இடங்களுக்கே வளர்ச்சியைக் கொண்டு செல்வதுதான் உண்மையான மக்களாட்சி" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications