ஸ்தம்பித்தது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை! தவெக மாநாட்டால் 25 கி.மீட்டருக்கு கடுமையான நெரிசல்!
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். 7 மணியளவில் மாநாடு நிறைவடைந்த நிலையில் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் வாகனங்களில் புறப்பட்டதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நேற்று (அக்டோபர் 27) நடைபெற்றது. முதல் மாநாடு என்பதாலும், மக்கள் மத்தியில் கட்சி மீது எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டன. மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டது.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் நேற்று மிகப் பிரம்மாண்டமாக திருவிழா போல் மாநாடு நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே தொடங்கிய மாநாடு, மாலை 7 மணியளவில் நிறைவடைந்தது.
விஜய் மாநாட்டில் பங்கேற்று பேசுவதை நேரில் கண்டுகளிக்க, லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் திரண்டிருந்தனர். இந்த நிலையில், மாநாட்டில் உரையாற்றிய பின், மாலை 6.30 மணியளவில் மாநாட்டுத் திடலில் இருந்து தவெக தலைவர் விஜய் புறப்பட்டுச் செல்ல, அவரைத் தொடர்ந்து தொண்டர்களும் அங்கிருந்து கிளம்பினர்.
இதன் காரணமாக, சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், விழுப்புரம் செல்லும் வழித்தடத்திலும், திண்டிவனம் செல்லும் வழித்தடத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நள்ளிரவு 12 மணியளவில் விழுப்புரம் சுங்கச்சாவடி அருகே சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
தமிழக வெற்றி கழக மாநாடு முடிந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட லட்சக்கணக்கான தொண்டர்களால் விக்கிரவாண்டி சாலை ஸ்தம்பித்தது. சுமார் 25 கி.மீ தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து வருகின்றன. போக்குவரத்து சீராக அதிகாலை வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
10 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த இடத்திலும் Uturn செய்ய முடியாத காரணத்தினால் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மற்றொருபுறம் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் சென்னை நோக்கி திண்டிவனம் வரை திருப்ப முடியாமல் திணறி வருகின்றன.
முன்னதாக, தவெக மாநாட்டுக்கு முன்னதாக பகலிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தவெக மாநாட்டால் விக்கிரவாண்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். தவெக மாநாட்டுக்கு வந்த வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications