சென்னை மருத்துவமனையில் சுருண்டு விழுந்த இதய சிகிச்சை மருத்துவர்! மாரடைப்பால் பரிதாபமாக பலி.. ஷாக்
சென்னை: இந்தக் காலத்தில் இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது சென்னையில் நடந்துள்ளது. அங்கு வெறும் 39 வயதான இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் பணியில் இருக்கும்போதே திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இந்தக் காலத்தில் மாரடைப்பு காரணமாக ஏற்படும் மரணங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அதிக வேலைப் பளு, மோசமான உணவுகள், உடல் பயிற்சி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மாரடைப்பு அதிகரித்து இருக்கிறது. முன்பும் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருந்த மாரடைப்பு சம்பவங்கள் இப்போது பரவலாக அதிகரித்து வருகிறது. இதனால் விலைமதிப்பற்ற உயிர்கள் நாம் இழந்து வருகிறோம்.

மருத்துவருக்கு மாரடைப்பு
அப்படியொரு மோசமான சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் மருத்துவமனை ஒன்றில் பணியில் இருந்த 39 வயதான இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் பலியான அந்த மருத்துவர் கிராட்லின் ராய் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்த கிராட்லின் ராய், புதன்கிழமை மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்தார். ராய் திடீரென மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்த நிலையில், அங்கே இருந்த சக மருத்துவப் பணியாளர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்துள்ளனர்.
100% தமனி அடைப்பு
மருத்துவமனை ஊழியர்கள் கடுமையாகப் போராடியும் ராயை காப்பாற்ற முடியவில்லை என நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதீர் குமார் தெரிவித்தார். இது தொடர்பாக டாக்டர் சுதீர் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், "அவரை காப்பாற்றச் சக மருத்துவ ஊழியர்கள் கடுமையாக முயன்றனர். சிபிஆர், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்டிங், இன்ட்ரா-அயோடிக் பலூன் பம்ப் என அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இடது பக்க முக்கிய தமனியில் 100% அடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு மோசமாக இருந்தது. இதனால் அவரை காப்பாற்ற முடியவில்லை" என்றார்.
காரணங்கள் என்ன
டாக்டர் ராயின் மரணம் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும் 30- 40 வயதுகளில் உள்ள இளம் மருத்துவர்கள் மத்தியில் இது போன்ற திடீர் மாரடைப்பு நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுதீர் குமார் தெரிவித்தார். வல்லுநர்கள் மேலும் கூறுகையில், "தொடர்ச்சியாக நீண்ட ஷிப்ட்டில் வேலை செய்து வருவதே இதற்குக் காரணமாகும். மருத்துவர்கள் பெரும்பாலும் ஒரு நாளைக்கு 12-18 மணிநேரம் வேலை செய்கிறார்கள்; சில சமயங்களில் ஒற்றை ஷிப்டில் 24 மணிநேரத்திற்கு மேல் பணிபுரிகிறார்கள்" என்றார்.
பணியில் இருக்கும் போது நோயாளிகளின் அதிக எதிர்பார்ப்பு காரணமாக மருத்துவர்கள் தொடர்ச்சியாக அதிக மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். மேலும் பல்வேறு வகையான அழுத்தங்கள் மருத்துவர்களின் உடல்நிலையைப் பாதிக்கின்றன. உயிரிழந்த டாக்டர் கிராட்லின் ராய்க்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
அதிகரிக்கும் மாரடைப்புகள்
மருத்துவர்கள் மட்டுமின்றி, பரவலாக இளைஞர்கள் மத்தியில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஒழுங்கற்ற உணவு, உடற்பயிற்சியின்மை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளைத் தவிர்ப்பது போன்றவையும் மரணங்களுக்கான பிற காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநலப் பிரச்சனைகளும் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications