கோட்டை ஸ்டேஷன் டூ வேளச்சேரி.. பறக்கும் ரயில் சேவை எப்போது தொடங்கும்? வெளியான குட் நியூஸ்
சென்னை: வரும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு பதிலாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க மின்சார ரயில்களே பயணிகளுக்கு பெரிதும் கை கொடுக்கின்றன. அதிலும், சென்னையின் முக்கியமான மின்சார ரயில் வழித்தடம் என்றால் அது, தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தையே சொல்லலாம்.

இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் சில நிமிடங்கள் ஓடாமல் போனால் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படும். சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 2 வழித்தடங்களில் மின்சார ரயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றது.
4-வது வழித்தடம்: இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே செல்லும்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணிக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து இருந்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் 4-வது வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதன் காரணமாக சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையில் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாகவும் 7 மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி: இதன்படி, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ரயில் சேவை மீண்டும் துவங்கும் என ரயில்வே கூறியது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி வரை மட்டுமே பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ள வேளச்சேரி வழித்தடத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் பயணிகள் பார்க்டவுன் ஸ்டேஷனில் மாறி பறக்கும் ரயில்களில் சென்று வந்தனர். ஆனால் தற்போது சிந்தாதிரிப்பேட்டை சென்று அங்கிருந்து மாறி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ரயில்வே அதிகாரிகள் விளக்கம்: 4-வது வழித்தட பணிக்காக இந்திய ரிசர்வ் வங்கியின் இடத்தை கையகப்படுத்துவதில் தெற்கு ரயில்வேக்கு சிக்கல் இருந்தது. இதனால், பணிகளை திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லை. இதன் காரணமாக மார்ச் மாதத்தில் நிறைவு பெற வேண்டிய இந்த திட்டம் இழுத்துக்கொண்டே சென்றது.
இந்த நிலையில், வரும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு பதிலாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "சென்னை கடற்கரை-எழும்பூர் இடையிலான 4-வது வழித்தடத்தில் தண்டவாளங்கள் இணைப்பு பணி 80 சதவீதம் முடிவடைந்துவிட்டது.
ஆகஸ்டு மாதத்தில் இருந்து: சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் நடைமேடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நடை மேம்பாலம், மேற்கூரைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது, தண்டவாள இணைப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதால் வரும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
பயணிகள் நிம்மதி: ரயில்வே அதிகாரிகளின் இந்த தகவல் வேளச்சேரி ரூட்டில் பயணிக்கும் பயணிகளுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. ஏனெனில் தற்போது சென்னை சென்ட்ரலில் இருந்து திருவான்மியூர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சிந்தாரிபேட்டை வரையில் பேருந்தில் சென்று அங்கிருந்து ரயிலை பிடிக்க வேண்டியுள்ளது. இந்த ரயில் பார்க் டவுனில் இருந்து இயக்கப்படும் பட்சத்தில் பயணிகளின் நேரம் வெகுவாக மிச்சமாகும் என்று தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
