விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர்.. ரயில்களில் இனி சல்லுன்னு போகலாம் .. தெற்கு ரயில்வே அசத்தல்
சென்னை: விழுப்புரம்-தஞ்சாவூர் மெயின் லைனில் ரயிலின் வேகத்தை 110 கிலோ மீட்டராக தெற்கு ரயில்வே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை முதல் தஞ்சாவூர் வரை உள்ள வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்க போகிறது. இதன் மூலம் கணிசமான பயண நேரமும் குறைய போகிறது.
இந்திய ரயில்வே ரயில்களில் வேகம் என்பது குரூப்-ஏ வழித்தடத்தில் 160 கிமீ என்கிற அளவில் உள்ளது. குரூப்-பி வழித்தடத்தில் 130 கிமீ வேகத்தில் இயக்க முடியும். தற்போதைய நிலையில் அதிகபட்சமாக 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இந்தியாவின் முக்கியமான சில வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான வழித்தடங்களில் 110 கிமீ வேகம் வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேநேரம் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வழித்தடங்கள் இன்னும்110 கிமீவேகத்தில் கூட செல்ல முடியாத அளவிற்கு தண்டவாள கட்டமைப்பு காணப்படுகிறது.

தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு 413 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டதால் விரைவு ரயில்கள் வேகம் முன்பைவிட அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல்-ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தமிழக ரயில் பாதைகளில் தண்டவாளத்தின் தரத்தை மேம்படுத்துவது, நவீன சிக்னல்கள் அமைப்பது, பாலங்களை வலுப்படுத்துவது போன்ற பணிகள் விறுவிறுப்பாக தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே 1,218 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் 110 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கி வருகிறது. இதேபோல் தெற்கு ரயில்வேயில் 1,394 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மேம்படுத்தி 110 கி.மீ. வேகத்துக்கு அதிகரிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மெதுவான பாதை, கரூர்-திண்டுக்கல், திருவாரூர்-காரைக்குடி, நீடாமங்கலம்-மன்னார்குடி, திருச்சி-ராமேசுவரம், மதுரை-மானாமதுரை, கொருக்குப்பேட்டை-அத்திப்பட்டு 3-வது, 4-வது பாதை, வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி, போத்தனூர்-பொள்ளாச்சி, பொள்ளாச்சி-பாலக்காடு, கன்னியாகுமரி-திருவனந்தபுரம், எர்ணாகுளம்-திருவனந்தபுரம், எர்ணாகுளம்-ஆலப்புழா, விழுப்புரம்-தஞ்சாவூர், மயிலாடுதுறை-திருவாரூர், விருதுநகர்-தென்காசி, மதுரை-திருமங்கலம், ஆகிய வழித்தடங்களில் ரயில் பாதைகளின் தரத்தை உயர்த்துவது, சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு, வளைவுகளை நீக்குவது, தேவையற்ற நுழைவுகளை அகற்றுவது போன்ற பணிகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டு வந்தது.
இதில் விழுப்புரம்-தஞ்சாவூர் மெயின் லைனில் பணிகள் முடிந்துள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட விழுப்புரம்-தஞ்சாவூர் மெயின் லைன் பிரிவில் கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் இருக்கின்றன. இந்த வழித்தடத்தில் பயணிகள் அதிக அளவில் பயணிக்கக்கிறார்கள். இந்த வழித்தடத்தில் சோழன் விரைவு ரெயில், செந்தூர் விரைவு ரெயில், உழவன் விரைவு ரயில், மன்னை விரைவு ரெயில் மற்றும் சென்னை எழும்பூர்-காரைக்கால், தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில், மன்னார்குடி-பாகத் கி கோதி, மன்னார்குடி-திருப்பதி, ராமேஸ்வரம்- திருப்பதி, ராமேஸ்வரம்-புவனேஸ்வர், ராமேஸ்வரம்- பனாரஸ், காரைக்கால்-மும்பை உள்பட நிறைய விரைவு ரயில்கள் போகின்றன.
மொத்தம் 175 கி.மீட்டர் தூரம் உள்ள விழுப்புரம்-தஞ்சாவூர் மெயின் லைன் பிரிவில் இதுவரை அனுமதிக்கப்பட்ட வேகமான மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்திற்கு பதில், 110 கி.மீட்டராக அதிகரிக்க தெற்கு ரெயில்வேயின் தலைமை அலுவலகத்தில் இருந்து திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு தகவல் வந்துள்ளது.
தண்டவாளத்தின் தரம் மற்றும் நிலைப்புத்தன்மையை நவீன தொழில்நுட்பமான அலைவு கண்காணிப்பு அமைப்பின் மூலம் பரிசோதனை செய்து வந்த ரயில்வே அதிகாரிகள், திருப்தி அளித்ததால் இந்த முடிவினை எடுத்துள்ளார்கள். எனவே 175 கி.மீட்டர் தூரம் உள்ள விழுப்புரம்-தஞ்சாவூர் மெயின் லைன் பிரிவில் விரைவில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இதேபோல் நீடாமங்கலம்-மன்னார்குடி இடையேயான அகல ரயில் பாதையிலும் ரயிலின் வேகம் 80 கி.மீட்டரில் இருந்து 110 கி.மீட்டராக அதிகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications