சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகளே.. 15 நாட்களுக்கு 6 ரயில்கள் ரத்து.. முழு விபரம்
சென்னை: சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் 6 ரயில்களும் இன்று முதல் 15 நாட்களுக்கு ரத்து செய்யப்பட உள்ளன. ரேணிகுண்டா பகுதியில் நடைபெற உள்ள தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். புரட்டாசி 2வது சனிக்கிழமை ஞாயிறு, திங்கள் என தொடர் விடுமுறையும் வருகிறது. அதனால் திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்கள் புரட்டாசி சனிக் கிழமைக்காகவும் காந்தி ஜெயந்தி விடுமுறையான திங்கட்கிழமைக்காகவும் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஏழுமலையான் பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்," சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் நடைபெற உள்ள தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
அறிவிப்பின்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 6:25 மணிக்கு புறப்படும், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில், பிற்பகல் 2:15 மணிக்கு புறப்படும், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில், மாலை 4:35 மணிக்கு புறப்படும், கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய மூன்று ரயில்கள் செப்டம்பர் 28 முதல் அக்.12ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து காலை 6:25 மணிக்கு புறப்படும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரயில்,காலை 10:10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் காலை 6:05 மணிக்கு புறப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது" என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் திருப்பதி செல்ல ரயில் பயணத்தை தவிர்த்து மாற்று வழி போக்குவரத்தை தேர்வு செய்து போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications