சிறுநீர் கழிக்க இறங்கிய லாரி டிரைவர்! மிளகாய் பொடி தூவிய 2 பேர்! ரூ. 10 லட்சம் கொள்ளை
சென்னை: சென்னையில் லாரி ஓட்டுநர் ஒருவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி, ரூ. 10 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற இரு மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். அவர்கள் தப்பிச் சென்ற காரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது எப்படி என்று பார்க்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த வெள்ளக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகன் சப்தகிரி (32). இவர் சென்னை, மதுரவாயலைச் சேர்ந்த முட்டை வியாபாரி செல்வராஜின் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக, செல்வராஜ் நிறுவனத்தில் இருந்து சப்தகிரி ரூ. 10 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு, அதை லாரியின் ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் வைத்துக்கொண்டு சென்னையிலிருந்து நாமக்கல்லுக்கு லாரியில் புறப்பட்டார்.
அதிகாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த பாப்பனப்பட்டு, அழுக்கு பாலம் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதைகளைக் கழிக்கச் சென்றுள்ளார். பின்னர், மீண்டும் லாரியை எடுக்க வந்தபோது, அங்கு வெள்ளை நிற காரில் வந்த இரண்டு மர்ம நபர்கள், லாரியில் ஏற முயன்ற சப்தகிரியின் முகத்தில் திடீரென மிளகாய்ப் பொடியைத் தூவினர். இதனால் சப்தகிரி அலறித் துடித்தார். அந்த இரு நபர்களில் ஒருவர் சப்தகிரியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்ட நிலையில், மற்றொருவர் இருக்கைக்கு அடியில் இருந்த ரூ. 10 லட்சத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு, தாங்கள் வந்த காரில் ஏறி திருச்சி மார்க்கமாகத் தப்பிச் சென்றனர்.
கண்களில் எரிச்சலுடன் இருந்த சப்தகிரி, விக்கிரவாண்டி போலீஸாருக்குத் தகவல் அளித்தார். போலீஸார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், சப்தகிரி இவ்வளவு பணத்தைக் கொண்டு செல்லும் தகவல் மர்ம கும்பலுக்கு எப்படித் தெரிந்தது? ரூ. 10 லட்சத்தைக் கொண்டு செல்லும் போது உடன் பாதுகாப்புக்கு யாரும் இல்லாமல் சப்தகிரி மட்டும் தனியாகப் போனது ஏன்? சப்தகிரிக்கும் இந்தக் கொள்ளைக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காரில் தப்பிச் சென்ற நபர்களைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications