டிரம்ப் திடீர் முடிவு, ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. இந்திய மக்களுக்கு ஒரே நாளில் இரண்டு குட் நியூஸ்
சென்னை: உலகின் அனைத்து பங்குச்சந்தைகளையும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு ஒன்றுமில்லாமல் செய்து வந்தது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்து இருந்தார்.இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்கிற நிலை இருந்தது. இந்த சூழலில் இந்தியாவில் பொருளாதாரத்தை சீரமைக்க ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது. அதேபோல் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாட்கள் வரி உயர்வை நிறுத்தி வைத்துள்ளார் டிரம்ப். இதனால் ஏற்படும் தாக்கம் பற்றி பார்ப்போம்.
அமெரிக்க அதிபராக2-வது முறையாக கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் பதவியேற்றார். தங்கள் நாட்டு பொருட்களுக்கு உலக நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் தங்கள் நாட்டுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். இதன்படியே ஏப்ரல் 2-ந்தேதி புதிய வரி பட்டியலை வெளியிட்டார்.

இந்தியாவிற்கு வரி
இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 52 சதவீத வரி விதித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா 10 சதவீதம் தான் வரிவிதித்து வருகிறது. இந்நிலையில் இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்தார். இதைப்போல மேலும் பல்வேறு நாடுகளுக்கான பரஸ்பர வரி பட்டியலையும் டிரம்ப் வெளியிட்டார். இதில் சீனாவுக்கு 34 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 20 சதவீதம், தென்கொரியாவுக்கு 25 சதவீதம், ஜப்பானுக்கு 24 சதவீதம், தைவானுக்கு 32 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார்.
வரிகள் எவ்வளவு
இதேபோல் கம்போடியா (49), வியட்நாம் (46), இலங்கை (44), பாகிஸ்தான் (29), தாய்லாந்து (36), சுவிட்சர்லாந்து (31), இந்தோனேஷியா (32), மலேசியா (24), தென்ஆப்பிரிக்கா (30), வங்காளதேசம் (37), இஸ்ரேல் (17), பிலிப்பைன்ஸ் (17) மற்றும் சவுதி அரேபியா, இங்கிலாந்து, பிரேசில், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துருக்கி, கொலம்பியா போன்ற நாடுகளுக்கு தலா 10 சதவீதம் என சுமார் 60 நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். சீனாவிற்கு மட்டும் தொடர்ந்து கூடுதல் வரி விதித்தார்.பதிலுக்கு சீனாவும் வரி விதித்தது. சீனா மீது 125% வரி விதித்துள்ளார் டிரம்ப்.
பங்கு சந்தைகள் பாதாளம்
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்புக்கு பின் உலக நாடுகளின் சந்தை ஆட்டம் கண்டது. இதனைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பால் பங்கு சந்தைகள் பாதாளத்திற்கு போயின. பங்கு சந்தை தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்தால், ஓய்வூதிய சேமிப்புதாரர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளானது.பல நிறுவனங்கள் பலத்த அடி வாங்கின. இந்தியாவை பொறுத்தவரை மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்தது.
வட்டி குறைப்பு
நேற்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் நடந்தது. அதில், குழுவின் 6 உறுப்பினர்களும் ரெப்போ வட்டிவிகிதத்தை மேலும் 0.25 சதவீதம் குறைக்க ஒருமனதாக ஒப்புதல் அளித்தார்கள். இதனால், ரெப்போ வட்டிவிகிதம் 6 சதவீதமாக குறைந்தது. இ்ந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அறிவித்த 26 சதவீத பரஸ்பர வரி அமலுக்கு வந்த நாளில், இம்முடிவினை அரசு எடுத்தது. வட்டி குறைப்பால், வங்கிகளில் வீடு, வாகன, தனிநபர் கடன்கள் பெற்றவர்களுக்கான வட்டிவிகிதம் குறையப்போகிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறும் போது, வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டிவிகிதம் மேலும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6 சதவீதம் ஆக்கப்பட்டுள்ளது. இன்னும் வட்டி குறைப்பு நடவடிக்கை தொடரும். அமெரிக்கா அறிவித்த பரஸ்பர வரியால் உலகம் முழுவதும் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றிய எங்கள் கருத்தை, மத்திய அரசிடம் கூறியுள்ளோம்.
90 நாட்கள் நிறுத்திவைப்பு
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாட்கள் புதிய வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.. இந்த நாட்களுக்கு பழைய 10 விழுக்காடு வரியே தொடரும்," என்று கூறினார். அதேநேரம் சீனா மீதான 125% வரி தொடரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
டிரம்ப் அறிவிப்பால் என்ன நன்மை
டிரம்பின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, அமெரிக்க பங்கு சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன. அந்நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களின் 80% மதிப்பை வைத்திருக்கும் எஸ்&பி 500 (S&P 500) கணிசமாக உயர்ந்துள்ளது. பங்கு சந்தையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பங்குச்சந்தைகள் மகாவீரர் ஜெயந்தி காரணமாக இன்று விடுமுறையாகும். எனவே நாளை பங்குச்சந்தைகள் திறக்கும் போது அதன் எதிரொலி தெரியவரும். பங்கு சந்தைகள் மீண்டும் இயல்பு நிலையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
வட்டி விகித குறைப்பால் என்ன நன்மை
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைந்துள்ளதால், வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் வட்டி விகிதம் குறைந்துள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு கடந்த பிப்ரவரியில் கணிசமாக குறைந்த வட்டி, இப்போது மீண்டும் குறைந்துள்ளது. வீட்டுக்கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் இஎம்ஐ கணிசமாக குறையும். மேலும் குறைந்த வட்டி காரணமாக தனிநபர் கடன் வாங்கி தங்களுக்கு வேண்டிய செலவுகளை மக்கள் மேற்கொள்வார்கள். நிலம் வாங்கிப்போட, தங்கம் வாங்க பலர் இப்போது பர்சனல் லோனை பயன்படுத்துகிறார்கள். திருமணம், மருத்துவம், சுற்றுலா, வீடு புதுப்பிப்பது, வேண்டிய பொருட்கள் வாங்குவது போன்றவற்றை செய்வார்கள்.
வாங்கும் திறன் அதிகரிக்கும்
அதேபோல் வீடு கட்டுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வாகன கடன் வட்டி குறைவதால் மக்கள் வாகனங்களை வாங்கவும் அதிக ஆர்வம் காட்டுவார்கள் .இப்படியாக பல்வேறு விஷயங்களில் மக்களுக்கு நல்லது நடக்கும். பொருளாதாரமும் பலம் பெறும். வட்டி குறைப்பால் மக்கள் கடன் வாங்கி வேண்டியதைவாங்குவார்கள் என்பதால் வாங்கும் திறன் மக்களுக்கு அதிகரிக்கும். நாட்டில் பணப்புழக்கமும் அதிகரிக்கும் என்பதால் வட்டி குறைப்பு என்பது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications