ஆழிப்பேரலை ஆடிய கோரத்தாண்டவம்.. சுனாமியால் 19 ஆண்டுகளாக ஆறாத ரணம்.. கண்ணீர் கடலில் கடலோர கிராமங்கள்
சென்னை: தமிழகத்தில் சுனாமி தாக்கி 19 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஆழிப்பேரலையால் அடித்துச்செல்லப்பட்டு உயிழந்தவர்களுக்கு கடலோர கிராமங்களில் வசிக்கும் ஏராளமான கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர கிராமங்கள் கண்ணீர் கடலில் மிதக்கின்றன.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி காலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை என்னும் சுனாமி என்னும் பேரலை உருவாகி பல லட்சம் மக்களின் உயிர்களை காவு வாங்கியது. வங்கக் கடலோரம் வசித்த மக்களும் கடலுக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்கள் பாதிப்பு அடைந்தது இந்த பேரலையில் சிக்கி பல மீனவர்கள் உயிரிழந்தனர். வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் கொண்டாட வந்த பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர். சுனாமியில் மரணமடைந்த பலரும் கொத்து கொத்தாக மண்ணில் புதைக்கப்பட்டனர். பலரது உயிர்களை அடையாளம் காணக்கூட முடியாமல் போனது. சுனாமியின்போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம்.
தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். கடலோரப் பகுதியில் அன்றைக்கு எழுந்த மரண ஓலம் அடங்க பல ஆண்டு காலம் ஆனது. ஆனால், கடல் அலை போல இன்னும் துயரச் சுவடுகள்தான் மறையவே இல்லை.
19 ஆண்டுகளாக இன்றும் கடற்கரையோரம் அந்த சோக கீதம் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. இன்றைக்கு சென்னை முதல் குமரி வரை கடலோரம் வசிக்கும் கிராம மக்கள், கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, இறந்துபோனவர்களுக்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஆழிப்பேரலை தாக்கிய நாளான டிசம்பர் 26ஆம் தேதி கடலோர கிராமங்களில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. சுனாமி தாக்கி உயிரிழந்த நாளான இன்றைய தினம் பலரும் கடற்கரைக்கு சென்று பால் ஊற்றி, மலர்களை தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பலரும் சுனாமியில் உயிரிழந்த உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கடலூர் மாவட்டத்தில் சோணங்குப்பம் பகுதியில் சுனாமி நினைவு தினத்தை ஒட்டி தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் ஏராளமான மீனவர்கள் ஒன்று சேர்ந்து சிங்காரத்தோப்பு பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று சோணாங்குப்பம் கடற்கரையில் பால் ஊற்றி, மெழுகுவத்தி ஏற்றி வைத்து பெண்கள் ஒன்று கூடி அழுது ஒப்பாரி வைத்து கண்ணீருடன் தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications