நெடுஞ்சாலையில் வீலிங் செய்து விபத்து.. டிடிஎஃப் வாசனுக்கு நீதிபதி குட்டு.. ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில் அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Twin throttlers எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் அவ்வப்போது பைக் ஓட்டும் வீடியோக்களை தனது சேனலில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு 2 கே கிட்ஸ்கள் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர்.

இவர் பைக் ஓட்டும் சாகசங்களை பார்த்து பூரித்து போய் அவருடைய யூடியூப் சேனலுக்கு ஏராளமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். நெடுஞ்சாலைகளில் கூட பைக்கில் அதிவேகமாக செல்வது, சாகசங்களை நிகழ்த்துவது உள்ளிட்டவைகளை செய்து வருகிறார்.
இவருக்கு 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு வட இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையில் 247 கி.மீ. வேகத்தில் இவர் சென்ற வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி அருகே தனது பைக்கில் வாசன் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் சென்ற பைக் விபத்தில் சிக்கி பெரும் சேதத்திற்குள்ளானது. அவருடைய பைக் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் சிக்கினாலும் வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவரை கைது செய்த காஞ்சிபுரம் போலீஸார் இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அன்றைய தினமே அவர் ஜாமீன் கோரினார். ஆனால் ஜாமீன் மனுவை நீதிபதி இனிய கருணாகரன் தள்ளுபடி செய்தார். கடந்த வெள்ளிக்கிழமை (செப் 22 ஆம் தேதி) அன்று காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் எண் 2 இல் நீதிபதி செம்மல் முன்னிலையில் ஜாமீன் கேட்டு வாசனின் வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர்.
இந்த ஜாமீன் மனு மீது வழக்கு விசாரணை நடந்த நிலையில் வாசன் மீது விபத்து ஏற்படுத்தும் வழக்குகள் தொடர்ந்து வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி மீண்டும் வாசன் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை காஞ்சிபுரம் மாவட்டம் , அமர்வு நீதிமன்றம் 2 இல் நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தது.
வாசனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாசனின் வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞரோ அவருக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என வாதிட்டார். இதையடுத்து இன்னும் இந்த வழக்கில் புலனாய்வு விசாரணை முடியாததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாது என்றார்.
இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதியுடன் வாசனின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் அவர் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் நீதிபதி இனியா கருணாகரன் முன்பு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். அதன்படி வாசன் அக்டோபர் 16 ஆம் தேதி வரை புழல் சிறையில் இருப்பார். இதனிடையே காஞ்சிபுரத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுவிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வாசன் தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது நீதிபதி - டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்து விடலாம், அவருடைய யூடியூப் சேனலை மூடிவிடலாம் என கூறிய நிலையில் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications