TTV, OPS குறித்த கேள்வி? பொறுத்திருந்து பாருங்கள் காலம் பதில் சொல்லும்.. நயினார் நாகேந்திரன் பதில்!
சென்னை: டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் என்டிஏ கூட்டணியில் இணைவார்களா என்ற கேள்விக்கு, காலம் பதில் சொல்லும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். அதேபோல் தொகுதி பங்கீட்டில் பிடிவாதம் காட்ட மாட்டோம் என்று கூறியுள்ள நயினார் நாகேந்திரன், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே ஒரே நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
ஜனவரி 23ஆம் தேதி என்டிஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடக்கவுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, ஜிகே வாசன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தொகுதி பங்கீடு குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாலர் பியூஷ் கோயலும் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பாஜக மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இடம்பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் என்டிஏ கூட்டத்திற்கான வரவேற்பு பேனரில் டிடிவி தினகரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் இதுவரை தனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை என்று புலம்பி சென்றிருக்கிறார். இதனால் இவர்கள் இருவரின் நிலை என்ன என்பது இதுவரை அக்கட்சியின் தொண்டர்களாலேயே கூட கணிக்க முடியவில்லை.
இந்த நிலையில் என்டிஏ பொதுக்கூட்டம் நடக்கும் மதுராந்தகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக வாக்குறுதியை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறிவிட்டார்.
அதன்படி கடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை சில மாற்றங்கள் செய்து அறிவித்திருக்கிறார். இதன்பின் நாங்கள் இணைந்து ஒரு சில வாக்குறுதிகளை வெளியிடுவோம். அப்போது மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டு ஆட்சி மாற்றம் உறுதி என்ற நிலை உருவாகும். அதேபோல் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவோமா என்பதை இப்போதே சொல்ல முடியாது.
யார் எந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பது முக்கியம் கிடையாது. எங்களுக்கு திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே முக்கியம். கூட்டணி, யாருக்கு எவ்வளவு சீட் என்பதை முடிவு செய்ய இன்னும் நாட்கள் இருக்கிறது. டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள்.. காலம் பதில் சொல்லும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications