“ஆண்டிப்பட்டியில் நிச்சயம் போட்டி.. சீட் கொடுத்தா கூட்டணி, இல்லைனா தனியாக நிற்போம்” - டிடிவி தினகரன்
சென்னை: "நான் ஆண்டிப்பட்டி தொகுதியில்தான் நிச்சயம் போட்டியிடுவேன். சீட் கொடுத்தால் கூட்டணி, இல்லை என்றால் தனியாக நிற்போம்" என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அமமுகவின் அரசியல் நிலைப்பாடு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமமுக ஆதரவின்றி எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என்ற டி.டி.வி. தினகரன் கூறி வருகிறார். வரும் தேர்தலில் எங்கள் இயக்கத்துக்கு எது நல்லதோ, அந்த முடிவை எடுப்போம். எந்தக் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அமமுகதான் எனக் கூறி வருகிறார் தினகரன்.

தை பிறந்ததும் ஜெயலலிதா பிறந்த நாளில் கூட்டணி முடிவுகளை அறிவிப்போம். வரும் தேர்தலில் அமமுக வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வது உறுதி. எங்களுக்கு புனித பூமியாக திகழ்வது ஆண்டிபட்டிதான். ஆகவே, நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆண்டிபட்டியில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என அண்மையில் கூறினார் டிடிவி தினகரன்.
அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணையக்கூடும் என்ற பேச்சுகள் உலவின. ஆனால், அமமுகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. தவெக உடனும் அமமுக பேசி வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தவெக உடன் பேசி வருவதாக செங்கோட்டையன் கூறி இருந்தார்.
அமமுகவுக்கு அதிமுக கூட்டணி இல்லை என்றால் தவெக கூட்டணி சாய்ஸில் இருப்பதாக கூறப்படுகிறது. தவெக கூட்டணியில் சீட் எண்ணிக்கை ஒத்து வந்தால் அந்தக் கூட்டணியில் இணைய டிடிவி தினகரன் தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தவெக நிர்வாகிகளும் தவெக உடன் கூட்டணி அமைக்க விருப்பம் காட்டுகின்றனராம்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "நான் ஆண்டிப்பட்டி தொகுதியில்தான் நிச்சயம் போட்டியிடுவேன். சீட் கொடுத்தால் கூட்டணி, இல்லையென்றால் தனியாக நிற்போம்." எனக் கூறியுள்ளார். ஆண்டிப்பட்டியை ரிசர்வ் செய்து தினகரன் களமிறங்கி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டதா? தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி கட்சிகளும், கூட்டணியை உருவாக்க முயற்சிக்கும் கட்சிகளும் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது உண்மை.
நண்பர் அண்ணாமலை எங்களை அலைபேசியிலும், நேரிலும் சந்திக்கும் போதெல்லாம் என்.டி.ஏ கூட்டணிக்கு வர வேண்டும் என்றுதான் சொல்கிறார். ஆனால், அதுகுறித்து நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. கூட்டணிக்காக என்னிடம் பேசுவார்களே தவிர, நான் யாரையும் நேரில் சந்திக்கவில்லை.
ஆண்டிப்பட்டி தொகுதியை நமக்கு அளித்தால் மட்டுமே கூட்டணி. இல்லை என்றால் தனியாக கூட ஆண்டிப்பட்டி தொகுதியில் நிற்போம். பூத் கமிட்டி வேலைகளை முறையாக பாருங்கள். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தால் நானே அறிவிப்பேன். எங்களின் தகுதியான வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கின்ற கூட்டணிக்குத்தான் நாங்கள் செல்ல இருக்கிறோம். தை மாதத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications