"முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும் வரை".. கூட்டணிக்கு "நோ" சொன்ன டிடிவி தினகரன்
சென்னை: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை கூட்டணியை ஏற்க மாட்டோம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இப்போதிருந்தே சூடுபிடித்து வருகிறது. திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுகவும், திமுகவிடம் இருந்து ஆட்சியை பறிக்க அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன.

மறுபக்கம் இரண்டு கழகங்களுக்கும் கடுமையான போட்டி கொடுத்து, தங்களின் இருப்பை நிரூபிக்க நாம் தமிழர், தவெக முயற்சித்து வருகின்றன. நாம் தமிழர் தனித்து போட்டி என கூறிவிட்டது. தவெக தங்கள் தலைமையில் வலிமையான கூட்டணி உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதற்கிடையே, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் 10 நாட்கள் கெடு முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறரார். தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை கூட்டணியை ஏற்க மாட்டோம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த முறை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி முத்திரை பதிக்கும். நாங்கள் உறுதியாக சொல்கின்றோம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடம் பிடிக்கின்ற கூட்டணி, ஆட்சி அமைக்கும். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். அதற்கான அர்த்தத்தை மே மாதம் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி இருக்கும் வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணியை ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை. பத்து நாட்கள் செங்கோட்டையன் கெடு விதித்தது தொடர்பான கேள்விக்கு, அது செங்கோட்டையன் விவகாரம், அதற்கு பதில் அவரே தருவார் என்றார். எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தொடர்பான கேள்விக்கு, டெல்லி செல்வது அவருடைய தனிப்பட்ட விஷயம் அவர் செல்கிறார் என்றார்.


Click it and Unblock the Notifications
