மனிதனை மனிதனாக கூட மதிக்க தெரியாதவர் டிடிவி தினகரன்.. அதிகார மமதை.. ஆர்பி உதயகுமார் ஆவேசம்
சென்னை: டிடிவி தினகரனுக்கு முதலில் நாவடக்கம் தேவை.. அதிகார மமதையில் இருந்து இன்னும் அவர் இறங்கவே இல்லை. தன்னிடம் உள்ள செல்வாக்கை இழந்து நிற்பதற்கு காரணமே நாவடக்கம் இல்லாதது தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என தமிழத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் வருகிற 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்கிறது.

டிடிவி ஆர் பி உதயகுமார் மோதல்: இதேபோல் அதிரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் வசைபாடியும் வருகின்றனர். இதில், டிடிவி தினகரன் மற்றும் அதிமுகவின் ஆர் பி உதயகுமார் ஆகியோர் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். ஆர் பி உதயகுமார் பேசுகையில் டிடிவி தினகரனுக்கு காவல் நாயாக இருந்தோம் என்றார். இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் பேசிய டிடிவி தினகரன், நாய் ஒரு போதும் சிங்கம் ஆகாது, வேண்டும் என்றால் ஓநாயாக ஆனால் ஆகும் என்று விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், டிடிவி தினகரன் இன்னும் அதிகார மமதையில் தான் இருக்கிறார் என்று ஆர் பி உதயகுமார் சூடாக பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக ஆர் பி உதயகுமார் பேசியதாவது:-
நாவடக்கம் இல்லாதவர்: மனிதனை மனிதனாக கூட மதிக்க தெரியாதவர் டிடிவி தினகரன். டிடிவி தினகரனுக்கு முதலில் நாவடக்கம் தேவை.. அதிகார மமதையில் இருந்து இன்னும் அவர் இறங்கவே இல்லை. தன்னிடம் உள்ள செல்வாக்கை இழந்து நிற்பதற்கு காரணமே நாவடக்கம் இல்லாதது தான்.
ஏற்கனவே நாவடக்கம் இல்லாததால் இப்போது எல்லாத்தையும் இழந்து நிற்கிறார். இன்னும் இவர் இப்படியே பேசினால் இருக்கிற கொஞ்ச நஞ்சமும் இனி இருக்காது. அவருடன் இருந்தவர்கள் யாராவது இப்போது இருக்கிறார்களா? எல்லாருமே போய்விட்டனர். இதற்கு முழு காரணனும் டிடிவி தினகரனுக்கு நாவடக்கம் இல்லாததால் தான். பாஜக விமர்சித்து பேசியவர் இன்று பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். இவ்வாறு ஆர் பி உதயகுமார் கூறினார்.
பபூன் என்று கூறிய டிடிவி தினகரன்: தேனி லோக்சபா தொகுதி தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. தங்க தமிழ்ச்செல்வனும், தினகரனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து ஆர்.பி. உதயகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது செய்தியாளர்களிடம் ஆர்பி உதயகுமார் பேசுகையில் "தினகரன் என்னை பபூன் என்று கூறுகிறார். அவர் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் பபூன் தான். ஆனால், டிடிவி தினகரன் பி.எஸ்.வீரப்பா மாதிரியான வில்லன். என்னால் எந்த தீமையும் ஏற்படாது. அவரால் என்னென்ன தீமை ஏற்படும் என்று தெரியும்.
நாய் சிங்கமாக மாறாது: ஜெயலலிதா இருக்கும்வரை டிடிவி தினகரன் வீட்டுக் காவல் நாயாக இருந்தோம். எங்களை சீண்டி பார்க்க நினைத்தால், எச்சரிக்கிறோம். இப்போது சீறும் சிங்கங்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளோம்" எனப் பேசினார்.
ஆர்.பி. உதயகுமாரின் இந்த பேச்சு குறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், "நாய் என்றைக்கும் சிங்கமாகாது. நாய் ஓநாயாக வேண்டுமானால் மாறும், சிங்கமாக மாறாது.
நன்றி இல்லாதவர்கள்: வீட்டுக்கு காவலாளியாக இருந்தோம் என்று சொல்கிறார் உதயகுமார். வீட்டுக்கு காவல் இருப்பவர்கள் எப்போதும் நன்றியுடன் இருப்பார்கள். இவர்களைப் போல துரோகம் செய்ய மாட்டார்கள். இவர்கள் நன்றி இல்லாதவர்கள்" என தினகரன் கூறினார். இந்த நிலையில் தான் டிடிவி தினகரனுக்கு பதில் அளிக்கும் வகையில் ஆர் பி உதயகுமார் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications