விஜயகாந்த் மறைந்து 3 நாள் கழித்து துக்கம் விசாரித்த டிடிவி தினகரன்! பிரேமலதாவை சந்தித்து ஆறுதல்!
சென்னை: விஜயகாந்த் மறைந்து 3 நாட்கள் ஆகும் நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று பிரேமலதாவிடம் துக்கம் விசாரித்திருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
விஜயகாந்த் உடலுக்கு தன்னால் அஞ்சலி செலுத்த வர முடியவில்லை என்றும் அதனால் இப்போது வந்ததாகவும் தெரிவித்த அவர், ஏன் வரமுடியவில்லை என்பதற்கான காரணத்தை கூறவில்லை. இதனிடையே பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோரிடம் விஜயகாந்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அவரது மரணம் பற்றியும் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்படும் முன்பு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், விஜயகாந்துக்கு பொது இடத்தில் மணிமண்டபமும், சிலையும் நிறுவ வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதே வேண்டுகோளை தான் பிரேமலதாவும் நேற்றைய தினம் வைத்திருந்தார். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அதன் மூலம் உள் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வுடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிக்கு டிஜிபி அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதாக இல்லை என்றும் குருவியை சுடுவது போல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள் எனவும் தெரிவித்த டிடிவி தினகரன், இது தவறான முன்னுதாரணமாகிவிடும் என விமர்சித்தார். அரசாங்கம் தண்டனை வாங்கித் தந்திருக்க வேண்டுமே தவிர பதவி உயர்வு வழங்கியிருக்கக் கூடாது என்றார்.
கூட்டணி குறித்து இப்போது கூறினால் சரியாக இருக்காது என்றவர், கூட்டணி முழுமை அடைந்த பிறகு அதை தெரிவிப்பதாக கூறினார். தேசியக் கட்சியுடனும் கூட்டணி வைக்கலாம், தனித்தும் போட்டியிடலாம் ஆனால் இப்போதே எதைப்பற்றியும் சொல்ல முடியாது எனத் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வமும் தாமும் இணைந்து அரசியலில் பயணிப்பது என முடிவெடுத்திருப்பதாகவும் பொறுத்திருந்து பாருங்கள் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications