நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் டிடிவி தினகரன்! எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு? மும்முரமாக சர்வே
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தேனி, நெல்லை, ராமநாதபுரம், தஞ்சை ஆகிய 4 தொகுதிகளிலும் முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக உள்ள நிலையில், மீண்டும் தேனியில் போட்டியிட அவர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று டெல்லி சென்றால் தான் தனக்கான லாபியை அங்கு நடத்த முடியும் என்பது டிடிவி தினகரனின் நம்பிக்கையாக உள்ளது.

அரசியலில் பதவி இல்லை என்றால் தொண்டர்கள், நிர்வாகிகளின் அபிமானத்தை இழக்க நேரிடும் என்பதை உணர்ந்துகொண்ட டிடிவி தினகரன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தாமே களமிறங்கி வெற்றி பெற்றால் தான் அடுத்தடுத்து கட்சியை கட்டுக்கோப்புடன் வழிநடத்த முடியும் என யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் பாஜக கூட்டணியில் அமமுகவை இடம்பெற வைக்கப் போகிறாரா அல்லது தனித்தே களம் காணப் போகிறாரா என்பது தான் இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் ஆர்.கே. நகரில் போட்டியிடுவார், டெல்டா மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார், உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என ஆளுக்கொரு ஆருடங்களை கூறி வந்தனர். ஆனால் டிடிவி தினகரனோ, யாரும் எதிர்பாராத வண்ணம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். அதே போல் தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் டிடிவி தினகரன் திடீர் ட்விஸ்ட் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவை மீட்போம் என்ற முழக்கத்துடன் கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டு நீண்ட நாட்களாக தலைவர் பதவியை காலியாகவே வைத்திருந்தார். சசிகலாவுக்கு தான் அந்தப் பதவி என எல்லோரும் கூறி வந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத கோபால் என்பவரை அந்தப் பதவியில் அமர வைத்தார். அதே போல் தான் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி விவகாரத்திலும் டிடிவி சில அதிரடிகளை காட்டுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications