புதிய பெயரில் அமைகிறது கூட்டணி.. தவெக தலைமையில் கைகோர்த்த கட்சிகள்! ஒருங்கிணைப்பாளர் நியமிக்க பிளான்
சென்னை: "தவெக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு இன்றி இந்த கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்த கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும்" என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் கழகம், புதிதாக கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக, சென்னை அடுத்த கோவளத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளுடன் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதற்காக, தோழமை கட்சித் தலைவர்களை சந்தித்த அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு முறைப்படி அழைத்து விடுத்திருந்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் கலந்துகொண்டன. இடதுசாரிகள் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை. ஒரு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டம் நிறைவுபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசுகையில், "தவெக தலைமையில் புதிய கூட்டணி அமைந்துவிட்டது. தவெக அரசில் அங்கம் வகித்துவரும் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றன. தவெக அரசு தொடர வேண்டும் என்று கூட்டத்தில் அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க தவெக திட்டமிட்டுள்ளது. விரைவில் அது குறித்து அறிவிக்கப்படும். கருத்து வேறுபாடு இன்றி இந்த கூட்டணி அமைந்துள்ளது. இயற்கையாக அமைந்திருக்கும் கூட்டணி. கூட்டணிக்கான பெயர் குறித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஆலோசித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பியுமான துரை வைகோ, "கூட்டணிக்கான புதிய பெயரை கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். பண அரசியல் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications