“அமைச்சரவையில் இடம்பெறுவோம்.. ஆனால்!” நிலைப்பாட்டை விளக்கிய.. சிபிஎம், சிபிஐ தலைவர்கள்!
சென்னை: தவெக தலைமையிலான அமைச்சரவையில் ஏன் கம்யூனிஸ்டுகள் இடம்பெறவில்லை? தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்தால், சாம்சங் மாதிரியான போராட்டங்களுக்கு அவசியம் இருந்திருக்காதே! என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. இதற்கு சிபிஎம்(CPIM), சிபிஐ(CPI) மாநில செயலாளர்கள் அளித்த பதில் கவனம் பெற்றிருக்கிறது.
தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்க்காணலில், இதற்கான பதிலை சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் மற்றும் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளனர்.

சிபிஎம் நிலைப்பாடு
பெ.சண்முகம் கூறியதாவது, "ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எங்கள் கொள்கைகளுக்கு விரோதமானது கிடையாது. நாங்களே 3 மாநிலங்களில் ஆட்சி நடத்தியவர்கள்தான். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை, அமைச்சரவை என்பது ஒரு கூட்டு பொறுப்பு. அமைச்சரவை என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு அனைவரும் தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அமைச்சரவையில் இடம்
தவெக ஆட்சியில், அவர்கள் கடைபிடிக்கும் கொள்கையின் அடிப்படையில்.. நாளைக்கே தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக ஒரு சில முடிவுகளை அரசு எடுக்கிறது எனில், நாங்கள் அமைச்சரவையில் இருந்தால்.. அதற்கு உட்பட வேண்டிய கட்டாயம் எங்களுக்கு வரும். அதிகமான எண்ணிக்கையில் எங்கள் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் எனில், அதற்கேற்ப எங்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அதிகம் இருக்கிறார்கள் எனில்.. அதன் தன்மை வேறு.
கட்டாயம் கிடையாது
ஆனால், 2 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு, அதில் ஒருவரை அமைச்சராக்குகிறோம் எனில்.. கருத்துக்களை சொல்லலாமே தவிர.. அதை வெளியில் பேசுவதற்கு கூட வாய்ப்பு இருக்காது. அதேபோல எங்களுடன் எல்லா விஷயத்திலும் தவெக உடன்பட வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. இருந்தாலும் இப்போது நாங்கள் ஆதரவு கொடுத்திருப்பதற்கான காரணங்கள் பல இருக்கின்றன.
கூடுதல் எண்ணிக்கை
எனவே நாங்கள் செல்வாக்கு செலுத்த முடியாத அமைச்சரவைக்குள் பங்கேற்பது சரியாக இருக்காது என்பதால்தான் நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு என்கிற நிலைக்கு வந்திருக்கிறோம். ஒருவேளை நாங்கள் பெரும்பான்மையாக.. கூடுதல் எண்ணிக்கையில் எம்எல்ஏகள் இருந்தால் நாங்கள் நிச்சயம் அமைச்சரவையில் இடம்பெறுவோம்" என்று கூறியிருக்கிறார்.
சிபிஐ நிலைப்பாடு
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேசியதாவது, "எங்களை பொறுத்தவரை, குறைந்தபட்ச செயல்திட்டம் வைத்து.. அதன் பாதையில் இந்த அரசு செல்கிறது என்றால் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம். இப்படி சொல்வதால் நாங்கள் அவர்களை கடந்து செல்கிறோம் என்றோ, வெளியிலிருந்து கல் எறிகிறோம் என்றோ அர்த்தம் கிடையாது.
தமிழக அரசியலின் சூழல் மாறியிருக்கிறது. இந்த மாறுதலை ஏற்கிறோம்.. ஜனநாயகத்திற்காக இதை அங்கீகரிக்கிறோம். இருந்தாலும் நாடு எதிர்பார்க்கிற மாறுதல் வேண்டும். இடது பக்கம் நாடு திரும்புகிறது எனில், உங்கள் ஆதரவோடு நாங்கள் அமைச்சரவையில் இடம்பெறுவோம்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications