சர்ச்சைகளில் சிக்கும் தவெக வேட்பாளர்கள்.. மயிலாப்பூரில் போட்டியிடும் வெங்கட்ராமன் மீது மனைவி பகீர் புகார்
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநில பொருளாளரும், மயிலாப்பூர் தொகுதி தவெக வேட்பாளருமான வெங்கட்ராமன் மீது அவரது மனைவி மீனாட்சி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். "என் குழந்தையை கண்ணில் காட்ட மறுக்கிறார் என்றும், மீறி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்" என்று அவரது மனைவி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள் கூட இல்லை. இதனால் அரசியல் களம் அனல் பறந்துகொண்டிருக்கும் சூழலில் பல்வேறு அதிரடி திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் விஜய் மீது அவரது மனைவி விவாகரத்து கேட்டு மனு அளித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு நெருக்கமானவரும், தவெகவின் பொருளாளரும், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளருமான வெங்கட்ராமன் மீது அவரது மனைவி கொலை முயற்சி புகார் அளித்து இருப்பது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

9 வயது குழந்தை
தவெக பொருளாளர் வெங்கட்ராமனின் மனைவி இன்று சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், "நான் எனது தாயாருடன் வசித்து வருகிறேன். சென்னை பம்மல் பகுதியை சார்ந்த பத்மநாபன் மகன் வெங்கட்ராமன் என்பவருக்கும் எனக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்கள் திருமணம் ரெஜிஸ்டர் ஆபிசிலும் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு எங்களுக்கு யோகவர்ஷினி என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்னர் எனது கணவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தோம். சென்னை குடும்ப நல நீதிமன்றம் எங்களை சேர்ந்து வாழ உத்தரவு பிறப்பித்தது. ஆனால் எனது கணவர் தற்போது என்னுடன் வாழாமல் எனது 9 வயது குழந்தையை என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக எடுத்து சென்று விட்டார். இப்போது அவர் விஜய் கட்சியான தவெகவில் மாநில பொருளாளராக உள்ளார்.
மிரட்டி ஏமாற்றி வருகிறார்
தற்போது மயிலாப்பூர் தொகுதியில் வேட்பாளராக உள்ளார். இதன் காரணமாக என் குழந்தையை என்னிடம் காண்பிக்காமல், ஒப்படைக்காமல் என்னை மிரட்டி ஏமாற்றி வருகிறார். மேலும் சொந்த தாயான என்னிடமே காட்டாமல் அவருடைய பாதுகாப்பில் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்து இருக்கிறார். எனவே ஐயா அவர்கள் எனது குழந்தையை எனது கணவர் வெங்கட்ராமனிடமிருந்து மீட்டு தருமாறும், என்னை மிரட்டும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் என் கணவர் என் குழந்தையை பார்க்க அனுமதிக்க மறுக்கிறார். நானும் என் தாயும் வீட்டிற்கு சென்றோம். ஆனால் அவர் உள்ளே அனுமதிக்காமல் எங்களை கொன்று விடுவதாக மிரட்டுகிறார். முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். பெரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இன்று காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்து இருக்கிறேன்" என்றார்.
ஏற்கனவே விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது அவரது கட்சியை சேர்ந்தவரும், முக்கிய பதவியில் உள்ளவருமான வெங்கட்ராமன் மீது மனைவி கொலை முயற்சி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications