என்டிஏ கூட்டணியில் தவெகவா? யாருடனும் கூட்டணி பேச்சு நடத்தவில்லை! வதந்தியை நம்பாதீர்! தவெக மறுப்பு
சென்னை: அதிமுக, பாஜக, ராமதாஸ், சசிகலா உள்பட யாருடனும் தவெக கூட்டணி குறித்து பேச்சு நடக்கவில்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வதந்திகளை நம்ப வேண்டாம்!

சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.
இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.
பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்!
வாய்மையே வெல்லும்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தவெகவை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சிப்பதாகவும், விஜய் தரப்பும் அதிமுக கூட்டணிக்குள் செல்ல முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வந்தன. அது போல் தவெக ராமதாஸ் பாமகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் சொல்லப்பட்டது.
அது போல் சசிகலா கட்சி தொடங்கிய நிலையில் அவரும் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்தன. அது போல் ஏற்கெனவே விஜய்யிடம் கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடந்து முடிந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினம் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது தவெகவை பாஜக கூட்டணிக்குள் இழுக்கவே இந்த சிபிஐ விசாரணை என சொல்லப்பட்டது. அது போல் விஜய் செவ்வாய்க்கிழமைக்குள் அவரது முடிவை சொல்ல வேண்டும் என அவகாசம் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. இதற்காக இன்றும் விஜய்யிடம் விசாரணை நடத்தப்படுகிறது என சொல்லப்பட்ட நிலையில் அவரோ நேற்றை பிளைட் பிடித்து சென்னை வந்து சேர்ந்துவிட்டார்.
அதிமுகவுடன் தவெக கூட்டணி என்பது குறித்து ஏற்கெனவே நிர்மல்குமாரிடம் கேட்ட போது, அப்படியெல்லாம் எதுவும் இல்லை, யார்தான் கிளப்பி விடுகிறார்கள் என தெரியவில்லை என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications